ஸ்டாலின் மீதான விமர்சனம்: தோழமைக் கட்சிகள் மீது கே.என்.நேரு அதிருப்தி!

public

திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதை தோழமைக் கட்சிகள் கண்டிக்க மறுப்பதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகம் சார்பில் ‘அமெரிக்காவில் பெரியார்’ என்னும் நூல் வெளியீட்டு விழா நேற்று (நவம்பர் 5) மாலை திருச்சியில் நடைபெற்றது. அதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய கே.என்.நேரு, “எங்களது தலைவர் பெயரைச் சொல்லி நிறைய உளறுகிறார் என்று விமர்சிக்கிறார்கள். சரி, நீங்களாவது சரியாகப் பேசுகிறீர்களா? டாக்டர் பட்டமெல்லாம் அளிக்கிறார்கள். கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொன்னவர்கள் நீங்கள். அமைச்சராக இருக்கக்கூடிய திண்டுக்கல் சீனிவாசனுக்கு பிரதமர் யாரென்றே தெரியவில்லை. மன்மோகன் சிங் என்கிறார். உலகத்திலேயே பெரிய விஞ்ஞானியான செல்லூர் ராஜு தெர்மாக்கோலை எடுத்துக்கொண்டு செல்கிறார். நீங்களெல்லாம் எங்களை குறைசொல்லும் அளவுக்கு வந்துவிட்டது” என்று விமர்சித்தவர்,

“அதனை திமுகவின் தோழமைக் கட்சிகள் கேட்டுக்கொண்டு இருப்பதுதான் எங்களுக்கு பெரிய வருத்தமே. எங்களை அடித்தால் உங்களையும் அடிப்பதாகத்தானே அர்த்தம். நீங்கள் அதனை கண்டிக்க வேண்டுமல்லவா” என்றும் அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், “தொடர்ச்சியாகக் கூட்டங்களில் பேசும்போது ஏதோ ஒருசில இடங்களில் தவறு வந்துவிடும். நான்கூட முதல்வர் பேசியது தவறு என்று சொல்ல வரவில்லை. முதல்வருக்கு அதுபோன்ற தவறு வரும்போது எங்களுக்கும் வருமில்லையா? தலைவர் ஸ்டாலின் எப்போதும் குறிப்பு வைத்துக்கொண்டுதான் பேசுகிறார் என எங்களை விமர்சிக்கிறார்கள். ஆனால், முதல்வர் உள்பட 27 அமைச்சர்களும் எழுதிவைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக படிக்கிறார்கள். நீங்கள் எங்களைப் பார்த்து குறிப்பு வைத்து படிக்கிறார் எனக் கூறுவதுதான் விநோதமாக உள்ளது” என்றும் அதிமுகவினரை குற்றம்சாட்டினார் கே.என்.நேரு.

முன்னாள் அமைச்சரும், திமுகவின் திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படையாக பேசக்கூடியவர். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் வலியுறுத்தியதாக நாளேட்டில் வெளியான செய்தி குறித்து கூட்டம் ஒன்றில் பேசிய கே.என்.நேரு, “காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாள் பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இது ஊடகங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் விவாதமான நிலையில், தான் எழுப்பியது கலகக் குரல் அல்ல என்றும், “உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவ்வாறு கூறினேன். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலக வேண்டும் என நான் கூறவில்லை” என்று விளக்கம் அளித்திருந்தார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0