ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘க/பெ. ரணசிங்கம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது.
சமீபத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். கனா திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் ஐஸ்வர்யா மீண்டும் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘க/பெ. ரணசிங்கம்’. அறிமுக இயக்குநர் விருமாண்டி இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. நாயகியை மையமாக கொண்ட இப்படத்தின் முக்கியமான திருப்புமுனையில் விஜய் சேதுபதி கெளரவ தோற்றத்தில் வருகிறார். விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா நடிக்கும் காட்சிகள் சென்ற மாத இறுதியில் படமாக்கப்பட்டது. மேலும், ராமநாதபுரம், திருமங்கலம், மதுரை உள்ளிட்ட இடங்களில் இரண்டு கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. இதற்கான லோகேஷன் பார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது படக்குழு விரைவில் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. அத்துடன் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.�,