சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கையை நிரூபிக்காவிட்டால் 69% இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் நேற்று (ஆகஸ்ட் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில்
“தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காக பெரும்படையே சதி செய்து கொண்டிருக்கும் நிலையில், அதைத் தடுப்பதற்கான அடிப்படைப் பணிகளைக் கூட செய்யாமல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு. இதைப் பயன்படுத்திக் கொண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அடுத்தகட்ட தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது” எனக் கூறியுள்ள ராமதாஸ், 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளையும் அவற்றிற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் பட்டியலிட்டுள்ளார்
மேலும் “69% இட ஒதுக்கீட்டைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரி இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள்தொகை 69%க்கும் அதிகம் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழக மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 68%, தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை 19%, ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை 87% என்று தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட புள்ளிவிவரத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதற்குக் காரணம் அவை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உத்தேசமாகத் தெரிவிக்கப்பட்டவை என்பதுதான். இத்தகைய சூழலில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கக்கூடும்.
தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படுவதற்குக் காரணமே திமுக, அதிமுக அரசுகள் தான். 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கில் 13.07.2010 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘‘தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும். எனினும், அடுத்த ஓராண்டுக்குள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு பெறுவோரின் எண்ணிக்கையை உறுதி செய்து, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டது. அதன்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞரிடம் நேரிலும், அதன்பின் முதலமைச்சராக வந்த ஜெயலலிதாவிடம் கடிதம் மூலமாகவும் வலியுறுத்தியிருந்தேன்” எனக் கூறியுள்ளவர், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த பாமக மேற்கொண்ட முயற்சிகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கையை நிரூபிக்காவிட்டால் 69% இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற முடியாது என்பது தான் யதார்த்தம். ஒருவேளை 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் அதன் விளைவுகளை நினைக்கவே அச்சமாக உள்ளது.
சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது கடினமான பணி அல்ல. தமிழ்நாட்டில் இத்தகைய கணக்கெடுப்பை அதிகபட்சமாக 45 நாட்களில் நடத்தி முடித்துவிடலாம். இதற்காக அதிக செலவும் ஆகாது. இதன் மூலம் நீண்ட காலமாக ஆபத்தை எதிர்கொண்டு வரும் 69% இட ஒதுக்கீட்டுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும். எனவே, உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.�,