உலக சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய ‘12 ஆங்கிரி மேன்’ என்ற திரைப்படம் வெளியாகி இன்றுடன் 62 ஆண்டுகள் ஆகிறது.
சினிமா மாணவர்களின் ‘டெக்ஸ்ட் புக்’காக இன்றும், காத்திரத்துடன் காட்சி மொழியினை கற்றுக்கொடுக்கும் இந்த திரைப்படம் இதே தினத்தில் தான் ஏப்ரல் 10, 1957ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.
நீதிபதியின் முன் ஒரு வழக்கு விசாரனைக்கு வருகிறது. குப்பத்தைச் சேர்ந்த 18வயது இளைஞன் தன் தந்தையை கத்தியால் குத்தி கொன்றதாக வழக்கு. அக்குற்றத்தை அவன் செய்யவில்லை என்பதற்கான நியாயமான சந்தேகங்கள் எழும் பட்சத்தில் அந்த இளைஞன் குற்றவாளியல்ல என தீர்ப்பாகும், இல்லையேல் தூக்கு தண்டனை நிச்சயம். இந்த வழக்கு 12 பேர் கொண்ட நடுவர் குழுவிடம் ஒப்படைப்படுகிறது.
இளைஞனின் எதிர்கால வாழ்க்கையை பனிரெண்டு நடுவர்களின் தீர்ப்பு தான் தீர்மானிக்கும். பதினொரு நடுவர்கள் இளைஞனை குற்றவாளியென தீர்ப்பளித்து வழக்கை முடிக்கப் பார்க்க ஒரே ஒரு நடுவர் மட்டும் தனக்கு சந்தேகம் உள்ளதாக கூறுவதினால் அந்த சந்தேகங்களுக்குப் பின்னுள்ள காரணிகளை நோக்கி ‘12 ஆங்கிரி மேன்’ படத்தின் கதை விரியும்.
‘கோர்ட் ரூம் டிராமா’ எனும் வகைமையை சேர்ந்த இந்தத் திரைப்படம், ஒரு அறைக்குள்ளே நிகழ்ந்து முடிகிறது. அந்த 12 பேருக்குள் நிகழும் விவாதம், வாக்குவாதம், ஆணவம், அறம் சார்ந்த பார்வை, லாஜிக், மனிதத் தன்மை, கருத்து வேறுபாடு ஆகியவற்றோடு அரசியலமைப்பும் நீதித்துறையும் ஒரு தனிமனிதனின் விதியை எவ்வாறு தீர்மானிக்கின்றன என பார்வையாளர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நீதியென்பது என்ன? நிஜத்தில் நம் சட்ட அமைப்பு அதனை ஊக்குவிக்கிறதா? என்ற தார்மீக கேள்விகள் நமக்குள் எழாமல் இருக்காது.
திறமையாக அமைந்துள்ள இப்படத்தின் உருவாக்கம் இன்றும் வியப்பளிக்கிறது. மூன்று அடுக்குகளில் கேமராவின் பார்வை நிலைகொண்டிருக்கும். வழக்கின் ஆரம்பகட்ட விசாரனையில் கேமரா மேலிருந்து கீழ் பார்ப்பது போலவும், நடுவில் சமநிலை தோற்றத்தில் பார்ப்பது போலவும், கடைசி பகுதியில் கீழிருந்து மேல் நோக்கி பார்ப்பது போலவும் வடிவமைத்திருப்பார் இயக்குநர் சிட்னி லூமட்.
பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக் கரடி விருது பெற்ற இப்படம், அரசியல், கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியாகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான படைப்பு.
�,”