டெல்லி ஐஐடி, நேரு நினைவு அருங்காட்சியகம், இந்திய மருத்துவ சங்கம் உட்பட சுமார் 6,000 நிறுவனங்களின் வெளிநாட்டு நிதியுதவி பெறும் உரிமத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் எந்த அமைப்போ அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற வேண்டுமென்றால், வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத்தின் (Foreign Contribution (Regulation) Act – எஃப்சிஆர்ஏ) கீழ் உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் இந்த உரிமத்தைத் தகுந்த காலத்தில் புதுப்பிக்கவும் வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் 18,778 நிறுவனங்களின் உரிமம் கடந்த 2020 செப்டம்பர் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் 31 இடையே காலாவதியாகி உள்ளது. இதில் 12,989 அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது எஃப்சிஆர்ஏ உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்து இருந்தன. ஆனால் 5,789 அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இந்த உரிமப் புதுப்பித்தல் தொடர்பாக விண்ணப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, இந்த நிறுவனங்களின் வெளிநாட்டு நிதியுதவி பெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத்தவிர எஃப்சிஆர்ஏ உரிமம் புதுப்பிக்கக்கோரி விண்ணப்பித்த 179 நிறுவனங்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த நிறுவனங்களின் உரிமமும் ரத்தாகி உள்ளன.
இதன் மூலம் சுமார் 6,000 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் எஃப்சிஆர்ஏ உரிமங்களை இழந்துள்ளன. டிசம்பர் 31 வரை 22,762 நிறுவனங்கள் மேற்படி உரிமம் வைத்திருந்த நிலையில், தற்போது வெறும் 16,829 நிறுவனங்கள் மட்டுமே இந்த உரிமம் பெற்ற நிறுவனங்களாக இருக்கின்றன.
இவ்வாறு எஃப்சிஆர்ஏ உரிமம் ரத்தான நிறுவனங்களில் பல முக்கிய நிறுவனங்கள் இடம்பெற்று உள்ளன. அதில் டெல்லி ஐஐடி, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ கவுன்சில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், இந்திய வாழிட மையம், லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி மற்றும் டெல்லி இன்ஜினீயரிங் கல்லூரி போன்றவை முக்கியமானவை.
மேலும் இந்திரா காந்தி தேசிய கலை மையம், லால்பகதூர் சாஸ்திரி நினைவு அறக்கட்டளை, ஆக்ஸ்பார்ம் இந்தியா, இம்மானுவேல் ஆஸ்பத்திரி சங்கம், இந்திய காசநோய் சங்கம், மகரிஷி ஆயுர்வேத பிரதிஸ்தான், தேசிய மீனவர் கூட்டுறவு கூட்டமைப்பு போன்ற அமைப்புகளும் தங்கள் உரிமத்தை இழந்திருக்கின்றன.
இதைப்போல இந்திய இஸ்லாமிய கலாசார மையம், கோத்ரெஜ் நினைவு அறக்கட்டளை, டெல்லி பொது பள்ளி சமூகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக அணுசக்தி அறிவியல் மையம் உள்ளிட்ட நிறுவனங்களும் அங்கீகாரம் ரத்தான நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
நாடு முழுவதும் சுமார் 6,000 நிறுவனங்களின் எஃப்சிஆர்ஏ உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
**-ராஜ்**
.�,