rமக்களே இன்று ஆறாவது மெகா தடுப்பூசி முகாம்!

Published On:

| By Balaji

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆறாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காரணம், சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா 9 மாதங்களில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் இந்த சாதனைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களும் தடுப்பூசியை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு எடுத்த கூட்டு நடவடிக்கைகளின் பங்களிப்பே இந்த சாதனைக்கு காரணம்.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு தடுப்பூசி செலுத்தும் பணியில் வேகமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து கொண்டிருந்தாலும், கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி முதல் மெகா தடுப்பூசி முகாம் என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று பெரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 12ல் நடந்த முதல் மெகா தடுப்பூசி 28 லட்சம் பேரும், இரண்டாவது முகாமில் 16 லட்சம் பேரும், மூன்றாவது முகாமில் 24 லட்சம் பேரும், நான்காவது முகாமில் 17 லட்சம் பேரும், ஐந்தாவது முகாமில் 22 லட்சம் பேரும் என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ஒவ்வொரு வாரமும் கூடுதலாகவே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் தடுப்பூசி செலுத்தும் பணியில் சில சிக்கல்கள் உள்ளன. முதல் டோஸை எடுத்துக் கொண்ட பலரும் இரண்டாவது டோஸை எடுத்துக் கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுபவர்களும், மது அருந்துபவர்களும் தடுப்பூசி போடக் கூடாது என்ற தவறான தகவலை நம்பி அன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை தவிர்க்கின்றனர்.

அதனால், மது மற்றும் அசைவ பிரியர்களும் பயன்பெறும் வகையில் இந்தவாரம் , அதாவது இன்று(அக்டோபர் 23) சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்; இதற்காக தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாமை நடத்துவதற்கு தற்போது 66 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதனால், எந்தவித தயக்கமுமின்றி மக்கள் இன்று நடைபெறும் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக இரண்டாம் டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டியவர்கள் கட்டாயம் இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share