தடை செய்யப்பட்டுள்ள ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இன்று முதல் பல ஊர்களில் காளை மாடுகளை வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் துவங்கி விட்டார்கள் மக்கள். இப்படி நடத்துகிற பலரையும் தமிழக அரசு கைது செய்து வரும் நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் தீர்ப்பை பொங்கலுக்கு முன்னரே சொல்ல வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் தமிழகத்தில் அது அதிர்ச்சியை ஏற்படுத்தி போராட்டங்களை தீவிரமாக்கியிருக்கிறது. இந்நிலையில். இது தொடர்பாக பாஜக ராஜ்யசபா உறுப்பினரும் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் “ உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றால் மத்திய அரசு தமிழகத்தில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னுதாரண வழக்கும் தீர்ப்பும்
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் ஜனாதிபதி ஆட்சி என்று சுப்பிரமணியன் சுவாமி மிரட்டியிருக்கும் நிலையில், அப்படியே நடத்தினாலும் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த மத்திய அரசு உத்தரவிட முடியுமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. ஆனால் கடந்த கால வரலாறுகளை நாம் திரும்பி பார்க்கையில் அதுபோன்ற சாத்திய கூறுகள் எதுவும் இல்லை. குறிப்பாக, காவேரி விவகாரத்தில் கர்நாடக அரசும் முல்லை பெரியார் விவகாரத்தில் கேரளா அரசும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்ற தவறிவிட்டன இருப்பினும் அம்மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு கொண்டு வரவில்லை. ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர அரசியல் சாசன பிரிவு 356 மத்திய அரசிற்கு கட்டுப்பட்ட அதிகாரங்களை கொடுத்துள்ளது. எனவே மத்திய அரசு மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர அரசியல் சாசன பிரிவு 356 பயன்படுத்தி மட்டுமே கொண்டுவர முடியும்.
கடந்த 1990 ஆம் ஆண்டு கர்நாடகாவில் மத்திய அரசு அரசியல் சாசன பிரிவு 356 பயன்படுத்தி குடியரசு ஆட்சியை அமல்படுத்தியது ஆனால் இதை எதிர்த்து அப்போது கர்நாடக முதல்வராக இருந்த எஸ்.ஆர்.பொம்மை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நீண்ட விவாதங்களை மேற்கொண்ட பின்னர் எஸ்.ஆர்.பொம்மையின் அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றளவும் உள்ளது.�,