குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்கூட சிறைக்குச் செல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால், ஜாதகம் சரியில்லை என்று கூறி, தோஷம் கழிக்க சிறைக்குச் செல்லும் விநோத பழக்கம் உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்து வருகிறது.
**ஜோதிடர்களின் ஆலோசனைகள்**
உத்தரப் பிரதேச மாநிலத்தில், தற்போது ஜோதிடத்தை நம்பும் போக்கு அதிகரித்து வருகிறது. சிலரது ஜாதகத்தில், சிறைக்குச் செல்லும் தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக, சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் அச்சம் அடைகின்றனர். தோஷத்தைக் கழிக்க 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்துக்குச் சிறைக்குள் இருக்கும்படி ஜோதிடர்கள் ஆலோசனை கூறுகின்றனர். இதற்கு லக்னோ மாவட்ட நிர்வாகமும் உதவிவருகிறது.
லக்னோ அருகே கோமதிநகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சிங், 38. இவர் ஜாதகத்திலும் சிறை தோஷம் உள்ளது. எனவே, ஜோதிடர் ஆலோசனைபடி மாவட்ட கலெக்டருக்கு ஏப்ரல் மாத கடிதம் இறுதியில் எழுதினார். அத்துடன் தனது ஜாதகத்தையும் இணைத்திருந்தார். நீதிமன்ற உத்தரவு கிடைத்தால் மட்டுமே, சிறையில் அடைக்க முடியும். எனவே, ரமேஷ் சிங் போலீஸ் ஸ்டேஷனில் லாக் அப்பில், 24 மணி நேரம் இருக்க கலெக்டர் அனுமதி அளித்தார். அங்கும் ஜோதிடர் உத்தரவுப்படி, சிறைக்கான உணவு வகைகளை மட்டுமே ரமேஷ் சிங் சாப்பிட்டார். அங்கிட் சதுர்வேதி என்பவரும் ஜனவரி மாதம் இதுபோல், 24 மணி நேரம் லாக் அப்பில் இருந்துள்ளார். அந்த நேரத்தில், வாழ்க்கையில் முக்கியப் பாடத்தை கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
**மாவட்ட ஆட்சியரின் விளக்கம்**
இதுகுறித்து லக்னோ மாவட்ட ஆட்சியர் கவுஸா ராஜ் சர்மா கூறுகையில், “இந்தாண்டில், இந்தக் கோரிக்கையுடன், 24 கடிதங்கள் வந்துள்ளன. குறைந்தபட்சம், 24 மணி நேரம் முதல், 48 மணி நேரம் வரை தங்களைச் சிறையில் வைக்கும்படி கோரிக்கை வைக்கின்றனர். மத ரீதியான நம்பிக்கை என்பதால் அவர்களுக்கு அனுமதி அளிக்கிறோம்” என்றார்.�,