மேற்கிந்தியத் தீவுகள் அணியை எளிதில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வந்தது. இதில் 2-1 என இந்தியா முன்னிலையில் இருந்த நிலையில் இன்று கடைசி போட்டி நடந்தது. இந்தியா வென்றால் தொடரைக் கைப்பற்றும் மேற்கிந்தியத் தீவுகள் வென்றால் தொடர் சமனாகும் எனும் நிலையில் திருவனந்தபுரத்தில் போட்டி தொடங்கியது.
இதில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகள் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்தன. துவக்க வீரரான கியாரன் பாவல் ரன் எதுவும் எடுக்காமல் புவனேஷ் குமார் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடந்த போட்டியில் நம்பிக்கையளித்த ஷாய் ஹோப்பும் பும்ரா பந்தில் டக் அவுட் ஆனார்.
அந்த அணியின் திடீர் நாயகனாக மாறியுள்ள ஷிம்ரான் ஹெட்மயர் 9 ரன்களுக்கு ரவீந்திர ஜடேஜாவின் துல்லியமான எல்பிடபுள்யூவுக்கு வெளியேறினார். இப்படியாகத் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ 104 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட் ஆனது. ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன் பின்னர் எளிதான இலக்கைத் துரத்திய இந்திய அணியில் ஷிகர் தவன் 6 ரன்களுக்கு அவுட் ஆனார். அதன் பின்னர் இணைந்த விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டதோடு அணியையையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 14.9 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதுடன் 3-1 என இந்தத் தொடரையும் வென்றது ரோஹித் 63 ரன்களைக் குவிக்க கோலி 33 ரன்களைச் சேர்த்தார். ஜடேஜா ஆட்ட நாயகன் விருதையும் மூன்று சதங்களை இத்தொடரில் விளாசிய கோலி தொடர் நாயகன் விருதையும் வென்றனர். இந்திய அணி இந்திய மண்ணில் தொடர்ச்சியாகக் கைப்பற்றும் 6ஆவது தொடர் இதுவாகும்.
இன்னும் ஒரு ரன் அடித்தால் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக பத்தாயிரம் ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் தோனியும் இணைந்திருப்பார். அதை எதிர்பார்த்து ஆடுகளத்தில் ரசிகர்களும் காத்திருந்தனர். ஆனால் தோனி பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காததால் அந்த சாதனை தற்போது தள்ளிப் போயுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே அடுத்ததாக டி-20 போட்டித் தொடர் நடக்கவுள்ளது. இது நவம்பர் 4ஆம் தேதி தொடங்குகிறது.�,