6கள் இறக்கியவர் கைது!

Published On:

| By Balaji

‘காங்கேயத்தில் கள் இறக்கியவர் கைது செய்யப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது’ என்று கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள ஊதியூரில் கள் இறக்கிய நல்லமுத்து என்பவரையும் அவருக்கு உதவியாக இருந்த முருகன் என்பவரையும் ஊதியூர் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள்மீது தமிழ்நாடு மதுவிலக்கு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதற்குக் கண்டனம் தெரிவிக்கும்விதமாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று (ஜனவரி 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள் இறக்கியவர்களை கைது செய்து அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறானது. உலகளாவிய நடைமுறைக்கு எதிரானது, இதை கள் இயக்கம் கண்டிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்துள்ள உணவு உரிமை ஆகும். பீகாரில் முழு மதுவிலக்கு கொண்டுவரப்பட்டபோது கள்ளுக்கு விலக்களிக்கப்பட்டது. கேரளாவிலும் அதன்படியே நடைபெற்றது. உலகில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. அவை எங்கிலும் கள் இறக்கத் தடையில்லை” என்றும் விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்து, “அரசியலமைப்பு சட்டப்படி சத்தியவாக்குப் பிரமாணம் எடுத்துத்தான் தமிழக அரசு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அரசுக்குச் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டது மதுவிலக்கு சட்டமா அல்லது மதுவிலக்கு சட்டத்துக்குக் கட்டுப்பட்டது அரசியலமைப்புச் சட்டமா என்பதற்குப் பதிலை அரசு சொல்லியாக வேண்டும். மேலும் கள் இறக்கியதாக தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து நடக்கத் தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel