விடிவதற்கு முன்பே தொடங்கிவிட்டிருக்கும் அனைவரின் விளையாட்டுகளும். ‘இன்னிக்கு ஸ்கூல் லீவு!’ என்பது முதல் ‘எனக்கு ஆக்ஸிடண்ட் ஆய்டுச்சு!’ என்பது வரை அனைவரும் நம்மைச் சரமாரியாகத் தாக்குவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? இன்றுதான் “ஏப்ரல் ஃபூல்” தினம் ஆயிற்றே!
ஏப்ரல் மாதம் எப்போது வரும் என்று காத்திருக்கும் பலர் இருக்கிறார்கள். ஆனால், எத்தனை பேருக்கு *ஏப்ரல் ஃபூல்* எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது என்பது தெரியும்?
யாருக்குமே நிச்சயமாகத் தெரியாது என்பதுதான் உண்மை. ஏனென்றால், வரலாற்றில் பல தகவல்கள் பகிரப்பட்டிருந்தாலும் எது சரியான காரணம் என்பது இன்றளவும் ஐயத்துக்கு இடமின்றி நிரூபணம் ஆகவில்லை.
பல தகவல்களில் மிகவும் பிரபலமானது, போப் நாள்காட்டியை ரோமனுக்கு மாற்றியதுதான். அதுவரையில் ஏப்ரல் 1 புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டுவந்த நிலையில், திடீரென்று ஜனவரி 1 புத்தாண்டாக மாறியது. இது பலருக்கும் தெரியாமல் போகவே, அவர்கள் எப்போதும் போல ஏப்ரல் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடியுள்ளனர். இதை மற்றவர்கள் பார்த்து, ‘ஏப்ரல் ஃபூல்ஸ்!’ என்று கேலி செய்திருக்கிறார்கள். இதுவே வழக்கமாகிப்போனது. இது பல கதைகளில் ஒரு கதை!
முதன்முதலாக *ஏப்ரல் ஃபூல்* கொண்டாடப்பட்டதாக, 1392ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த ஆண்டிலோ, அதற்கு முன்போகூட இது வழக்கத்திற்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வேறு சிலர், 1582ஆம் ஆண்டிலிருந்துதான் இது தொடங்கியது என்று சொல்கிறார்கள். எது சரி என்பது இன்று வரை தெரியவில்லை. மேலும், பண்டைய ரோமானிய திருவிழாவான *ஹிலாரியா* என்பதுடனும் இத்தினம் தொடர்புடையதாம்.
உலகம் முழுவதிலும் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா, பிரேசில், கனடா, இந்தியா உட்பட பல நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டிலிருந்தே இது பிரபலமான கொண்டாட்டமாக உள்ளது. என்றாலும், இப்போதுவரை எந்த இடத்திலும் விடுமுறை அளிக்கப்படுவதில்லை!
நாம் சின்னச் சின்னதாக ஏமாற்றுவதெல்லாம் ஒரு புறமிருக்க, பிபிசி ஊடகத்தின் விளையாட்டு குறிப்பிடத்தக்கது. 2008ஆம் ஆண்டில், அண்டார்டிகாவில் உள்ள பென்குயின்கள் பறக்கத் தொடங்கிவிட்டதாகவும், அதுவும் தென்னமெரிக்காவில் உள்ள மழைக்காடுகளுக்குப் பறந்து சென்றதாகவும் வெளியிட்டது! உலகமே நம்பி ஏமாந்தது!
தமிழ் இதழ்களும் ஏப்ரல் முதல் நாளை முன்னிட்டுப் பல விளையாட்டுக்களில் ஈடுபட்டதுண்டு. இதில் பல பெருந்தலைகளின் பெயரும் அடிபட்டு, பிரச்சினை சீரியஸாகும் அளவுக்குச் சென்றதும் உண்டு.
“எதுல விளையாடறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா?” என்று பலராலும் கேட்கப்பட்டாலும், பல விதமான ஏமாற்றுத் தந்திரங்கள் தொடர்ந்து பலராலும் பிரயோகிக்கப்படுவது வழக்கமாகவே உள்ளது.
அது இருக்கட்டும், இன்று நீங்கள் யாரிடமாவது ஏமாந்தீர்களா, யாரையாவது ஏமாற்றினீர்களா?
ஹேப்பி ஏப்ரல் ஃபூல்ஸ் டே!
**- ஆசிஃபா**
�,”