6இந்தியா ஏன் தோற்றது?

Published On:

| By Balaji

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சவுத்தாம்டன் டெஸ்ட் போட்டி பல்வேறு திருப்பங்களைக் கடந்து நிறைவடைந்திருக்கிறது. இரு அணிகளும் வெற்றி வாய்ப்பை சமமாகக் கொண்டு கடுமையாகப் போராடிய இந்தப் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றியை ருசித்து தொடரைக் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக இந்தப் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் குவித்தது. பின்னர் இந்தியா 273 ரன்கள் சேர்த்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் 271 ரன்கள் குவித்த இங்கிலாந்து, இந்திய அணிக்கு 245 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

கடின இலக்கைத் துரத்திய இந்திய அணி, 22 ரன்களுக்குள் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய விராட் கோலி, அஜிங்க்ய ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். இந்த ஜோடி 101 ரன்கள் சேர்த்த நிலையில் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் இந்தியாவின் வெற்றிக் கனவும் தகர்ந்து போனது. பின்னர் வந்த வீரர்கள் யாரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆடாததன் விளைவு, இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி 3-1 என தொடரை இழந்தது.

இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையில் இருந்த இரண்டு வித்தியாசங்கள்தான் வெற்றியை முடிவு செய்திருக்கின்றன. ஒன்று இங்கிலாந்து அணியின் பின்கள வீரர்களின் ஆட்டத்திறன். மற்றொன்று அந்த அணியின் சுழற்பந்து வீச்சு. இந்தப் போட்டியில் இந்திய பின்கள வீரர்களைக் காட்டிலும் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் மொயீன் அலி, சாம் கரன் கூட்டணி ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை மொயீன் அலி இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வினோ வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார்.

இந்தப் போட்டிக்கு முன்பு யாரைத் தேவையில்லை என்று நினைத்து இங்கிலாந்து ஒதுக்கி வைத்திருந்ததோ, அவர்களே இந்தப் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைத்துள்ளனர். இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய சாம் கரனுக்கு மூன்றாவது போட்டியின்போது ஓய்வளிக்கப்பட்டிருந்தது. அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் மொயீன் அலி, இந்தப் போட்டியில்தான் தனது முதல் வாய்ப்பைப் பெற்றார்.

**ஹர்திக் பாண்டியா தேவையா?**

இந்தியாவின் அடுத்த கபில்தேவ் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக அடித்த ரன்கள் வெறும் 4 மட்டுமே. பந்துவீச்சில் 1 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். இவர் களமிறங்கும் ஆறாவது இடத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த பேட்ஸ்மேன் இல்லாதது இந்தியாவின் பெரும் பின்னடைவு.

ஆல்-ரவுண்டர் என்ற பெயரில் பாண்டியாவுக்குத் திரும்பத் திரும்ப வாய்ப்பளிப்பதற்குப் பதில் ஒரு கைதேர்ந்த பந்துவீச்சாளரையோ அல்லது பேட்ஸ்மேனையோ எடுத்தால் அடுத்த போட்டியில் இந்தியா வெல்ல வாய்ப்பிருக்கிறது.

**கோலி vs ஜேம்ஸ் ஆண்டர்சன்**

இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி vs ஜேம்ஸ் ஆண்டர்சன் போட்டியில் கோலியே வெற்றி பெற்றிருக்கிறார். இதுவரை நடந்து முடிந்த 8 இன்னிங்ஸில் விராட் கோலி ஒருமுறை கூட ஆண்டர்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழக்கவில்லை. கோலி இதுவரை கிறிஸ் வோக்ஸ் மற்றும் ரஷீத் பந்துவீச்சில் தலா இரு முறையும், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், மொயீன் அலி ஆகியோரது பந்துவீச்சில் தலா ஒரு முறையும் ஆட்டமிழந்திருக்கிறார்.

**ப்ரித்வி ஷாவுக்கு வாய்ப்பு?**

தற்போது தொடக்க ஆட்டக்காரராக உள்ள கேஎல் ராகுல் கடைசியாக துணைக் கண்டங்களுக்கு வெளியே ஆடிய 13 இன்னிங்ஸ்களில் ஓர் அரைசதம் கூட கடக்காமல் வெறும் 13 சராசரியை மட்டும் கொண்டு 171 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே, அடுத்த போட்டியில் இவருக்குப் பதிலாக அறிமுக வீரராக ப்ரித்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

**கடைசி 13 இன்னிங்ஸில் ராகுலின் ஸ்கோர் விவரம்:**

28, 10, 4, 0, 16, 4, 13, 8, 10, 23, 36, 19, 0

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share