சினிமா பாணியில் கொலை: பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்!

Published On:

| By Balaji

ஹைதராபாத்தில், 27 வயதான பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சம்ஷாபாத் நகரைச் சேர்ந்தவர் திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 27 வயதான இவர், மதபூர் மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிலிருந்து பணிக்காக கொள்ளுரு கிராமத்திற்கு பைக்கில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது ஸ்கூட்டி பஞ்சர் ஆகியுள்ளது. இதையடுத்து திவ்யா தனது சகோதரி பாவ்யாவுக்கு கால் செய்து நடந்ததைத் தெரிவித்துள்ளார். தொண்டுபள்ளி ஓஆர்ஆர் டோல்கேட் அருகில் இருப்பதாகவும் சிலர் உதவ முன் வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். பைக் பஞ்சர் ஆகிவிட்டது. இனி உங்களால் செல்ல முடியாது. பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் பஞ்சர் ஒட்டி வந்து தருகிறோம் எனக் கூறி திவ்யாவை ஸ்கூட்டியில் இருந்து இறங்கச் சொல்லியுள்ளனர். பின்னர் ஸ்கூட்டியை சரி செய்ய ஒரு பையனை அனுப்பியுள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் எல்லா கடைகளும் மூடப்பட்டிருப்பதாக அந்த நபர் திரும்பியுள்ளார். இதனை தன் தங்கையிடம் திவ்யா தெரிவித்துள்ளார்.

மேலும், எனக்குப் பதற்றமாக இருக்கிறது. என்னிடம் தொடர்பிலேயே இரு என பாவ்யாவிடம் கூறியுள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேயே இரவு 9.44 மணியளவில் திவ்யாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களது குடும்பத்தினர் திவ்யா சொன்ன இடத்துக்கு உடனடியாக விரைந்துள்ளனர். ஆனால் அவர் அங்கே இல்லை, இதையடுத்து உடனடியாக காவல்துறையில் புகார் செய்துள்ளனர். இந்த புகாரைத் தொடர்ந்து அன்று இரவு முழுவதும் போலீசார் திவ்யாவைத் தேடியுள்ளனர்.

இந்நிலையில், ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஷாத்நகர் பகுதியில் உள்ள ஒரு பாலத்துக்குக் கீழே இளம்பெண் ஒருவரின் உடல் இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்த அவ்வழியே சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவ்விடத்தில் இருந்து அப்பெண்ணின் ஆடை, செருப்பு, பர்ஸ் ஆகியவற்றையும் கண்டெடுத்துள்ளனர். விசாரணையில் அது திவ்யா எனத் தெரியவந்தது. பெற்றோர்கள் தெரிவித்த விவரங்களின் அடிப்படையில் அது திவ்யா என்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து பாவ்யா, திவ்யா எனக்குக் கால் செய்யும் போது சில லாரி டிரைவர்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், மது அருந்தியிருப்பதாகவும் பதற்றத்துடன் தெரிவித்தார், ஸ்கூட்டியை அங்கேயே விட்டுவிட்டு அருகில் இருக்கும் டோல்கேட்டுக்கு செல்லும்படி கூறினேன். ஆனால் சிறிது நேரத்திலேயே அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார். உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திவ்யாவின் ஸ்கூட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சினிமா பாணியில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். செல்போன் அழைப்பை வைத்தும், டோல் கேட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்ஷாபாத் டிசிபி பிரகாஷ் ரெட்டி, சந்தேகத்தின் அடிப்படையில் இருவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திவ்யா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகே இதுகுறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். திவ்யா ரெட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது குறித்து பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share