தேர்வு முறைகேடு: டெக்னாலஜியைக் கையிலெடுத்த யுஜிசி!

Published On:

| By Balaji

பல்கலைக்கழகங்கள் தேர்வின்போது நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகளைப் பொருத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி நேற்று (நவம்பர் 3) உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை நடத்தும்போது மாணவர்கள் ப்ளூ டூத், வாட்ச், செல்போன் ஆகியவற்றின் மூலம் முறைகேட்டில் ஈடுபடலாம் என்பதால், தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகளைப் பொருத்தலாம் என்று 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து தற்போது அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி துணைவேந்தர்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “அரசின் கொள்கை முடிவை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். தேர்வுகளில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு தேர்வு மையத்தில் குறைந்த அலைவரிசை கொண்ட ஜாமர் கருவிகளைப் பொருத்த வேண்டும்.

தேர்வு மையங்களில் மட்டும் பயன்படுத்தப்படும் வகையில் சிறிய அளவிலான ஜாமர் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. EC-CRJ-6B5 என்ற வகையிலான கருவிகளின் பரிசோதனையும் வெற்றி அடைந்துள்ளன. இந்த ஜாமர் கருவிகளைப் பொருத்தினால், பொருத்திய இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவுக்கு சிக்னல் வராமல் தடுக்கும்.

ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தேர்வு நடைபெறும் முன்பு அங்கு ஜாமர் பொருத்தப்பட்டுள்ளதா, அந்தக் கருவி பயன்பாட்டில் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஜாமர் கருவியின் தன்மை, சிக்கல்களைத் தடுக்கும் திறன் உள்ளிட்டவற்றையும் சோதிக்க வேண்டும்.

ஜாமர் கருவி பொருத்தும் முன் முறையான, அரசின் கொள்கையின்படி பாதுகாப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுப் பொருத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel