கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தண்ணீரைக் குடிப்பதற்குப் பலரும் தங்கிய நிலையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உடல்நலனுக்குக் கேடு விளைவிக்காது என்பதை உணர்த்துவதற்காக அந்தத் தண்ணீரை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எடுத்து குடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சிங்கப்பூரைப் போன்று சென்னையில் எதிர் சவ்வூடு பரவுதல் முறையில் கழிவுநீரைச் சுத்திகரித்து அதைப் பயன்படுத்தும் நீராக மாற்றுவதற்காக கோயம்பேடு, கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக கொடுங்கையூரில் ஒன்பது ஏக்கர் பரப்பளவில், 348 கோடி ரூபாய் மதிப்பில் நாள்தோறும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் மூன்றாம்நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்று (அக்டோபர் 1) தொடங்கி வைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்த இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு தொடக்க விழாவுக்குப் பிறகு இந்தச் சுத்திகரிப்பு நிலையம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஆராய்ந்தனர்.
கழிவுநீரைச் சுத்திகரித்து உற்பத்தி செய்யப்படும் இந்தத் தண்ணீர், முதற்கட்டமாகத் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்க, இதைக் குடிநீராகப் பயன்படுத்த முடியுமா, குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்காதா என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டிருந்தார் முதல்வர்.
அப்போது அந்தத் தண்ணீரில் ஒரு கோப்பையை எடுத்து அமைச்சர் வேலுமணி கடகடவென குடிக்க, நிகழ்ச்சியைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டனர். அதிகாரிகள், அமைச்சர் வேலுமணியின் செயல்பாட்டை பாராட்டி, ‘உங்கள் மூலம் இந்த நீர், நல்ல நீர்தான் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படும்’ என்று தெரிவித்தனர்.
நாட்டிலேயே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உருவாக்கப்பட்ட தண்ணீரைக் குடித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரே அமைச்சர் வேலுமணி தானென்றும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.�,