காஷ்மீர் மாணவர்கள் பள்ளிக்கு வர தேர்வு அறிவிப்பு!

Published On:

| By Balaji

ஜம்மு காஷ்மீரிலுள்ள மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வர 5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வரையறை நீக்கப்பட்ட பின்பு, காஷ்மீரில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்களின்றி வகுப்பறைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உயர்நிலைப் பள்ளிகளைத் திறக்க அரசாங்கம் முடிவு செய்த இரண்டு மாதங்களுக்குப் பிறகும், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் மாணவர்கள் வருகைப் பதிவேடு மோசமான வருகையையே பதிவு செய்திருக்கின்றன.

தொடர்ந்து அங்கு நிலவி வரும் பதட்டத்தாலும், அச்சமான சூழல் நிலவுவதாலும் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகிறார்கள். மேலும், கடந்த இரண்டு மாதங்களாக தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டு சீரற்ற முறையில் இயங்கி வருவதால், பள்ளிகளுக்கு சென்ற பிள்ளைகள் தாமதமாக வந்தால் கூட தெரிந்துகொள்ள முடியாத நிலையே இருந்து வருகின்றது.பள்ளி நிர்வாகங்களைப் பொறுத்தவரை, பள்ளிகளின் இயல்பான செயல்பாடும் மாணவர்களின் வருகையும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

ஸ்ரீநகரின் புச்போரா பகுதியில் அமைந்துள்ள கிரீன் வேலி பள்ளியின் சேர்மன் முகமது யூசுப், இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், “எங்கள் பள்ளி ஒவ்வொரு நாளும் திறந்திருக்கும், ஆனால் மாணவர்கள் தான் வருவதில்லை. ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகப்பெரிய கவலை, அவர்களின் குழந்தையின் மீதான கவனமும் பாதுகாப்புமாகும். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர எங்கள் டிரைவர்கள் கூட வெளியே செல்ல தயாராக இல்லை” என காஷ்மீரிலுள்ள பள்ளிகளின் நிலையைக் கூறினார்.

இந்நிலையில், மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வரும் நோக்கில் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்தது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வரும் அக்டோபர் 29ஆம் தேதி முதலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அக்டோபர் 30ஆம் தேதி முதலும், 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நவம்பர் 18ஆம் தேதி முதலும் துவங்குகின்றன. இந்த [அறிவிப்பை](https://www.edtr.ai/lfue) ஜம்மு காஷ்மீர் பள்ளிக் கல்வி வாரியம் (ஜே.கே.போஸ்) கடந்த வாரம் அறிவித்துள்ளது.

ஆனால் இந்த முடிவு பெற்றோர்களையும் பள்ளிகளையும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ஸ்ரீநகரின் வசிக்கும் இஜாஸ் அஹ்மத், இது குறித்து கூறும் போது குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்வது முக்கியம் தான். ஆனால் அவர்களின் பாதுகாப்பிற்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள்? ஒரு மாத காலத்திற்கும் மேல் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் இருக்கும் நிலையில், அவர்கள் எவ்வாறு தேர்வுகளில் அமர்வார்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share