கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் கால்களை இழந்து தவிக்கும் அனுராதா குடும்பத்தினரை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த அனுராதா கடந்த 11ஆம் தேதி வேலைக்குச் செல்வதற்காக நீலாம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் அவருக்கு இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. ராயல் கேர் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கடுமையாக சேதமடைந்திருந்த அப்பெண்ணின் இடது கால் அகற்றப்பட்டது. தனது மகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று அவரது தாய் சித்ரா கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவச் சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் நிதி வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
அதிமுக கொடிக் கம்பம் சரிந்ததால் விபத்துக்குள்ளாகி, கால்கள் அகற்றப்பட்டுள்ள அனுராதாவுக்கு ஆறுதல் கூறினேன். திமுக சார்பில் நிதியுதவி வழங்கி, அவருக்கு செயற்கைக் கால் பொருத்தவும் உதவப்படும் என உறுதியளித்தேன். அதிமுக சார்பில் ஆறுதல் கூட இல்லை; இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது தெரியாது என்று முதல்வர் எப்படிச் சொன்னாரோ, அதேபோன்று அனுராதா விபத்தில் சிக்கிய சம்பவமும் தெரியாது என்று அலட்சியமாகப் பதில் கூறியது வேடிக்கையாக உள்ளது. அனுராதா விபத்தில் சிக்கியது தொடர்பாக லாரி ஓட்டுநர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். கொடி கட்டியவர்கள், விழா நடத்தியவர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
�,”