M25 கோடி ரூபாய்: ஸ்டாலின் கோபம்!

Published On:

| By Balaji

கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக சார்பில் தேர்தல் நிதி அளிக்கப்பட்டது பற்றிய கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோபம் அடைந்தார். வில்லிவாக்கம் -கொளத்தூர் ரயில்வே மேம்பாலம், வில்லிவாக்கத்தில் ரயில்வே கேட், சாலைப் பணிகளை இன்று (அக்டோபர் 1) சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவரோடு ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் கண்ணையா, வடசென்னை திமுக எம்.பி. கலாநிதி உள்ளிட்டோர் இருந்தனர்.

ஆய்வுப் பணிகளுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசினார் ஸ்டாலின். அப்போது கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருக்கு திமுக 25 கோடி ரூபாய் தேர்தல் நிதி கொடுத்தது தொடர்பாக திமுக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, “பிரேமலதாவுக்கும் உங்களுக்கும் (பத்திரிகைகள்) பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் ஆணையத்துக்கும் வருமான வரித்துறைக்கும்தான் பதில் சொல்ல வேண்டும். அவர்களுக்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டோம்” என்று கோபமாக பதில் அளித்தார் ஸ்டாலின்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கட்சி பதில் விளக்கம் அளித்திருக்கிறது. பிரேமலதா என்ன வருமான வரித்துறை அதிகாரியா என்று நேற்று திமுக செய்தித் தொடர்பாளரும் எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவன் பதில் சொல்லியிருந்தார். இந்நிலையில்தான் இன்று திமுக தலைவர் ஸ்டாலின், ‘இதுகுறித்து பத்திரிகைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்று பாய்ந்திருக்கிறார்.

பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனுக்கள் அளித்தது பற்றிய ஒரு கேள்விக்கு, “இந்த ஆட்சி வந்ததில் இருந்து எட்டு வருடமாக மத்திய அரசிடம் மனு அளித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை” என்று கூறினார் ஸ்டாலின்.

திமுக எம்.பி.க்களும், திமுக கூட்டணிக் கட்சி எம்.பி.க்களும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக மத்திய அமைச்சர்களிடம் தொடர்ந்து மனு அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்துதான் ஸ்டாலின் சொல்லுகிறாரா என்ற கேள்வி பத்திரிகையாளர்களிடையே எழுந்தது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share