விரைவில் வேளச்சேரி பரங்கிமலை ரயில் திட்டம்: முதல்வர்!

Published On:

| By Balaji

இன்று சட்டமன்றத்தில் அலுவல் நடவடிக்கையின் போது வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன், ஆதம்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பூங்கா – நடைபாதை அமைக்க ரூ. 3.48 கோடி ஒதுக்கியும் பணி தொடங்கவில்லை என்று குறிப்பிட்டார். 2012ல் 4015 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை 2017ல் 2761 ஆகக் குறைந்துள்ளது என்று தெரிவித்த அவர் 2011 முதல் 2020 வரை எத்தனை மரக்கன்றுகள் தமிழகத்தில் நடப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நில உரிமையாளர்களிடம் பேசி, நிலம் கையகப்படுத்தப்பட்டு வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்றால் மக்கள் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றார். நீலகிரியில் புதிதாகக் கட்டப்படும் மருத்துக் கல்லூரியின் கட்டுமான பணிக்காக வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக மரத்துக்கு 10 புதிய கன்றுகள் நடப்படும் என்று குறிப்பிட்டார்.

**வேளச்சேரி பரங்கிமலை ரயில் திட்டம்**

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், போக்குவரத்தை எளிமையாக்கும் வகையிலும் சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாகச் சென்னை கடற்கரை – மயிலாப்பூா் இடையேவும், இரண்டாவது கட்டமாக மயிலாப்பூா் -வேளச்சேரி இடையேவும் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் நில இழப்பீடு தொடர்பாகச் சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததன் காரணமாக வேளச்சேரி பரங்கிமலை ரயில் திட்டம் தாமதமானது. இந்த நிலையில் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share