12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. 12ஆம் வகுப்புகளுக்கு விடுபட்ட 35,000 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இதனிடையே தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி மே 27ஆம் தேதி தொடங்கியது. சுமார் 8.5 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஜூலை முதல் வாரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவித்தன.
இந்த சூழலில் பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. 35,000 மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில் 718 பேர் மட்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். மீண்டும் பேருந்துகளை இயக்கினால் மட்டுமே தேர்வு நடத்த முடியும். இதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்த பிறகு தேர்வு முடிவு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் ” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பள்ளிகள் திறக்கப்பட நீண்ட காலம் ஆகலாம் என்று தெரிவித்துள்ள அவர், “மருத்துவத் துறை, வருவாய்த் துறை, பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். நிலைமை சரியான பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். எனவே பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்” என்று தெரிவித்துள்ளார்.
**-கவிபிரியா**
�,