பண்டிகை காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் இன்று(அக்டோபர் 13) பல்வேறு நலத்திட்டங்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். உலக கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து மண்டல வாரியாக நடமாடும் தடுப்பூசி மையத்தையும், அரசு மருத்துவமனையில் சிறப்பு குழந்தைகள் கவனிப்பு பிரிவையும் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் உடல் நலம் தொடர்பான 3 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, ’சற்றே குறைப்போம் திட்டம்’ மூலம் உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணெய் குறைத்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ‘உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம்’ என்ற திட்டத்தின் மூலம் திருமணம், விழாக்கள், கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கைப்படாமல் மீதமாகும் உணவை தன்னார்வலர்கள் மூலம் தேவைப்படுவோருக்கு கொண்டு சேர்க்கும் திட்டமும் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. அந்த திட்டத்தை, கோவை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அதுமட்டுமில்லாமல்,‘உபயோகித்த எண்ணெய் மறுபயன்பாடு’ என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது.பெரிய ஹோட்டல்களில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை தெருவோர கடைகள், குடிசை பகுதிகளுக்கு தெரியாமல் விநியோகிக்கப்படுகிறது. அந்த எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்ளும்போது உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது.
அதனால், முதல்வரின் அறிவுறுத்தலின் உணவகங்கள், விடுதிகளில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை துறை சார்பில் பணம் கொடுத்து வாங்கி அதனை பயோ டீசலாக மாற்றும் பணி தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. அதிலும் கோவை சிறப்பாக செயல்படுகிறது.
தடுப்பூசி போடும் பணியில், கோவை சிறப்பான இலக்கை எட்டிக் கொண்டிருக்கிறது. கோவையில் நடைபெற்ற 5 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 5.51 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை 93 சதவிகித்தினரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 37 சதவிகித்தினரும் செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டிலே இங்குதான் அதிகளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. அனுமதி கிடைத்ததும் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் நேற்றைக்கு 50 இடங்களில் நடத்தப்பட்டது. அதில், 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,”தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை. தினந்தோறும் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
2 வயது முதல் 18 வயசுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்தவுடன் முதல் மாநிலமாக தமிழ்நாடு பணிகளை தொடங்கி விடுவோம். அம்மா கிளினிக் ஒரு குறுகிய காலத் திட்டம். அந்த திட்டம் முடிவடைந்து விட்டது. அம்மா கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள் தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் உங்களுக்கு தெரியும். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பண்டிகைக்காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது” என்று கூறினார்.
**-வினிதா**
�,