நாங்குநேரி: காங்கிரசின் வித்தியாசப் பிரச்சாரம்- அதிர்ந்த அதிமுக

Published On:

| By Balaji

நாங்குநேரி தொகுதியில் அதிமுகவுக்கு போட்டியாக காங்கிரஸார் தீவிரமான களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் அதிமுகவே அதிர்ச்சியடையும் வகையில் காங்கிரசாரின் கள வியூகம் அமைந்திருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, செயல் தலைவர்கள் அனைவரும் தொகுதியில் முகாமிட்டு ஒவ்வொரு பகுதியாக சென்று வேட்பாளர் ரூபி மனோகரனுக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வகையில் காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளரும் கிருஷ்ணகிரி எம்.பி.யுமான டாக்டர் செல்லகுமார் தனது ஆதரவாளர்களோடு நேற்று (அக்டோபர் 13) களக்காடு ஒன்றியத்தில் இருக்கும் கடம்போடு வாழ்வு கிராமத்தில் பிரசாரத்துக்காக சென்றார். அவரோடு காங்கிரஸ் ஓபிசி பிரிவின் மாநில தலைவர் நவீன், விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் திருச்சி ஜி.கே. முரளிதரன் உள்ளிட்டோர் சென்றனர்.

அந்த கிராமத்துக்குள் சென்ற சில நிமிடங்களிலேயே ஊரில் உள்ள அனைவரும் கொத்தனார் வேலைக்குச் செல்பவர்கள் என்பதை அறிந்துகொண்டனர் காங்கிரசார். நானூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் கொத்தனார் அல்லது கையாள் எனப்படும் உதவியாள் வேலை செய்து வருகிறார்கள்.

அவர்களில் ஒருவரிடம், ‘நீங்க தமிழ்நாடு அரசோட அமைப்பு சாரா நலவாரியத்துல உறுப்பினரா இருக்கீங்களா?’ என்று கேட்டார் செல்லகுமார். ‘அதெல்லாம் இல்லீங்க. அதனால என்னங்க பிரயோசனம்?’ என்று ஒரு கட்டிடத் தொழிலாளி கேட்க,

’இந்த அமைப்பு திமுக ஆட்சிக் காலத்துல முதலமைச்சர் கலைஞரால உண்டாக்கப்பட்டது. பொன்.குமார் தலைமையில சிறப்பா செயல்பட்டு வந்துச்சு. இப்பவும் அமைப்பு சாரா நல வாரியம் இருக்கு. அதுல உறுப்பினரானால் அறுபது வயதுக்குப்பிறகு அரசாங்கம் ஓய்வூதியம் வழங்கும், பெண்குழந்தைகளின் கல்விக்கு கல்லூரிப்படிப்பு வரை முன்னுரிமை, அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி, திருமணத்திற்கு நிதிஉதவினு நிறைய கிடைக்கும்’ என்று செல்லகுமார் சொன்னதைக் கேட்டு,. ‘இங்க இருக்கிற யாரும் அதுல உறுப்பினர் ஆகலீங்களே?” என்று சொன்னார்கள் கிராமத்தினர்.

உடனடியாக நெல்லை மாவட்டத்தின் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் தலைவரான (TCTU) முத்தையாவை அமைப்பு சாரா நல வாரிய உறுப்பினர் படிவங்களோடு கடம்போடு நகர் வாழ்க்கை கிராமத்துக்கு வரச் சொன்னார் செல்லகுமார். கூடவே போட்டோ கிராபரையும் அழைத்து வரச் சொன்னார்.

முத்தையாவின் மூலம் கையோடு உறுப்பினர் படிவத்தை பூர்த்திசெய்யவைத்து, போட்டோ இல்லாதவர்களை உடனடியாக போட்டோ எடுத்து, நானூறுக்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்களை அமைப்பு சாரா நல வாரியத்தில் அன்றே சேர்த்ததோடு அல்லாமல் அடையாள அட்டையை உடனே அவர்களுக்குக் கொடுக்குமாறும் உத்தரவிட்டார் செல்லகுமார்.

ஓட்டுக் கேட்க வந்த இடத்தில் நானூற்று சொச்சம் பேருக்கும் அமைப்பு சாரா நல வாரிய அடையாள அட்டை வழங்கியதற்கு அம்மக்கள் நன்றி தெரிவித்தார்கள். இத்தகவல் அறிந்த அதிமுகவினர், காங்கிரஸாரா இப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்று அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share