மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்துவரும் பார்ம் ஈஸி (Pharm Easy) நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் ரூ.6,250 கோடி நிதித் திரட்ட செபியிடம் விண்ணப்பித்துள்ளது. ஆனால், இந்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் விற்பனை தளத்தில் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என 2018இல் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி பார்ம் ஈஸி நிறுவனம் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்துவருகிறது. இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது பங்குச் சந்தையில் பொதுப் பங்கு விற்பனையை நடத்த அனுமதி கோரி சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் விண்ணப்பித்துள்ளது. இதையடுத்து அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான சிஏஐடி அமைப்பு பார்ம் ஈஸி நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட அனுமதி வழங்கக் கூடாது என செபிக்குக் கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ‘பார்ம் ஈஸி நிறுவனத்தின் மீதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதன் ஐபிஓ நடவடிக்கைக்கு அனுமதி வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால் அது முதலீட்டாளர்களின் முதலீடுகளைப் பாதிக்கும். எனவே அதன் ஐபிஓ விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளது.
பார்ம் ஈஸிக்கு எதிராக இப்போது அல்ல; இதற்கு முன்பே பலமுறை எதிர்ப்பு எழுந்துள்ளது. மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940இன்படி மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான எந்த விதிமுறைகளும் இல்லை. எனவே ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.
ஆனால், எதையும் மதிக்காமல் பார்ம் ஈஸி போன்ற நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வதோடு, தொடர்ந்து தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் விளம்பரங்களையும் செய்து வருகிறது. தற்போது அடுத்தகட்டமாக ஐபிஓ வெளியிட்டு நிதித் திரட்டவும் தயாராகியிருக்கிறது. ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வது தொடர்பான விவகாரத்தில் சரியான தெளிவு ஏற்படும்வரை ஐபிஓ-வுக்கு ஒப்புதல் தரக் கூடாது. அப்படி வழங்கினால் பல லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் முதலீடு ஆபத்துக்குள்ளாகும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
**-ராஜ்**
.�,