பிரதமர் மோடி 2019 ஜனவரி மாதம் 27 ஆம் தேதி மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனைக்கு, தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது அடிக்கல் நாட்டினார். 1264 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. முழுதாய் ஒரு வருடம் ஒரு மாதம் முடிந்த நிலையில் சுற்றுச் சுவர் மட்டுமே முக்கால் வாசி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 5) மதுரை வந்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கடன் ஒப்பந்தம் வரும் செப்டம்பர் மாதம்தான் ஜப்பான் அரசோடு கையெழுத்தாக இருக்கிறது. அதன் பின் கட்டிடப் பணிகள் தொடங்கும். 2022 இல் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும்” என்றும் கூறியுள்ளார்.
மார்ச் 5 ஆம் தேதி மதுரையில் இருந்து அயோத்தி வரை செல்லும் ஆன்மிக சுற்றுலா ரயிலான, ‘ராமாயண எக்ஸ்பிரஸ்’ துவக்க விழாவுக்கு வருகை தந்து பச்சைக் கொடி அசைத்துவைத்தார் அஸ்வினி குமார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்,
“மதுரையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) கட்ட மத்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையிலான கடன் ஒப்பந்தம் வரும் செப்டம்பர் மாதம் கையெழுத்திடப்படும். இந்த மருத்துவமனை 2022 செப்டம்பரில் திறக்கப்படும்” என்றார்.
மேலும், “ 2021 க்குள் மதுரை மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சூரக்ஷா யோஜனா (பி.எம்.எஸ்.எஸ்.ஒய்) இன் கீழ் தமிழ்நாட்டில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகள் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பாஜக அரசாங்கத்தின் கீழ், நாட்டில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 28,000 அதிகரித்து, தற்போது அது 80,000 ஆக உள்ளது. 2022-2023 க்குள் இதை 1,00,000 ஆக உயர்த்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது” என்று தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார்.
பாஜக நிர்வாகிகளின் கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார் மத்திய அமைச்சர். அவரோடு பாஜக மாநில செயலாளர் ஆர்.சீனிவாசன் மற்றும் கட்சியின் பிற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
**-வேந்தன்**�,”