தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்ட வலைகளின் விவரங்கள் குறித்து 5 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுருக்குமடி வலையில் பவளப்பாறைகள், மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால், அந்த வலை கொண்டு மீன்பிடிக்க கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்து அரசாணை பிறப்பித்தது. ஆனால், கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுருக்குமடி வலையைக் கொண்டு மீன்பிடிக்கலாம் என கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்தது. அந்த பரிந்துரையின்படி, தங்களை சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடிக்க அனுமதி வழங்கக் கோரி மீனவர்கள் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது.
ஆழ்கடலில் மட்டுமே பவளப்பாறைகள், மீன் குஞ்சுகள் காணப்படுவதால், 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுருக்கு மடி வலை கொண்டு, மீன் பிடிப்பதால் மீன்களுக்கு எந்த பாதிப்பும் வராது. இது குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக சுருக்குமடி வலைக்குத் தடை விதிக்கப்பட்டால் நாட்டுப்படகு கொண்டு, மீன்பிடிக்கும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
வாதத்தை கேட்ட நீதிபதிகள், தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்ட வலைகளில் விவரங்களையும், அளவுக்கு அதிகமாக மீன் பிடிக்கப்படுவதை அரசு எப்படி கண்காணிக்கப்போகிறது என்பது குறித்தும் 5 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளிவைத்தனர்.
**சுருக்குமடி வலை**
சுருக்கு பை போன்று வட்ட வடிவில் இறுகிக்கொண்டே செல்லும் என்பதால் இதற்கு சுருக்கு மடி வலை என பெயர். கடலில் உள்ள நீரோட்டங்களுக்கு தகுந்த வகையில் இவ்வலை வீசப்படுகிறது. கடலின் அடியில் 500 மீட்டர் வரை கீழே செல்லும். பெரிய சுருக்கு மடிவலையை வீசினால் எல்லா மீன்களும் மாட்டிக்கொள்ளும். இவ்வகை வலைகளில் மீன் பிடித்தால் அதிக லாபம் கிடைப்பதால் மீனவர்கள் இதை அதிகம் பயன்படுத்த முன் வருகின்றனர். இவ்வலையின் விலை மிக அதிகம்.
**வினிதா**
�,