சென்னையை, தமிழகத்தை அடுத்த தலைமுறைகளிடம் எப்படி ஒப்படைக்கப் போகிறோம்?

Published On:

| By Balaji

அ.குமரேசன்

நவீன இந்தியாவின் முதல் நகரமான சென்னை கருவாகி உருவாகி வளர்ந்த கதையை, எடுத்துவைக்கப்பட்ட முதலடி தொடங்கி நகரின் பரிணாம வளர்ச்சியை அங்குலம் அங்குலமாகப் பதிவு செய்திருக்கிற புத்தகம் என்று பதிப்பாளர் (சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேசன்ஸ்) குறிப்புடன் வந்துள்ள புத்தகம் ‘சென்னை: தலைநகரின் கதை’. சென்னையின் கதையெனில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, எல்ஐசி போன்ற கட்டடங்களின் வரலாறு மட்டுமல்ல, இந்த நகரத்தை வார்த்தெடுத்த மனிதர்களின் வரலாறும் கூட.. வெறுமனே ஆண்டுகளையும் தேதிகளையும் கொண்ட புள்ளிவிவரத் தொகுப்பாக அல்லாமல், சென்னை உருவாக்கத்தின் பின்னணியில் பொதிந்திருக்கும் உண்மைகளை வரலாற்றுச் சுவை குன்றாமல் வெளிக்கொண்டு வந்துள்ளது இந்தப் புத்தகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரான பார்த்திபனின் கட்டுரைகள் தொகுப்பாக வந்துள்ள இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுக நிகழ்வு அண்மையில் இணையவழியில் நடத்தப்பட்டது. வாசித்ததன் தாக்கங்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்துகொள்வதற்கென்றே இயங்கிவரும் ‘வாருங்கள் படிப்போம்’ என்ற, எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பேராசிரியர்கள், வாசகர்கள் கொண்ட குழு வாரந்தோறும் இத்தகைய புத்தக அறிமுக நிகழ்வை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இசையாசிரியர் லோ.குமரன் இந்தப் புத்தகம் பற்றிப் பேசினார், தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துப் பகிர்வு நடைபெற்றது.

சந்திப்பின் நோக்கங்களுள் ஒன்று புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துவது. என்னளவில் அந்த ஆவல் மிகுந்திருக்கிறது, இனி அதனை வரவழைத்துப் படிக்க வேண்டும். இதனிடையே, உரையாளர் புத்தகத்திலிருந்து எடுத்துச்சொன்ன தகவல்கள் வேறு சிந்தனைகளுக்கு இட்டுச்சென்றன. சென்னைக்கு உள்ளேயும் அதற்கு அப்பாலும் சென்ற அந்தச் சிந்தனைகளை நிகழ்வின் உரையாடல் நேரத்திலேயே சுருக்கமாக வெளிப்படுத்த முடிந்தது என்றாலும், சற்று விரிவாக இங்கே பகிர்ந்துகொள்ள விரும்பியதன் விளைவே இந்தக் கட்டுரை.

**முதன்மைப் பெருமிதம்**

பார்த்தது, படித்தது, பழகியது என்ற அனுபவங்களின் அடிப்படையில் முதலிலேயே ஒன்றைச் சொல்ல முடியும் – சென்னை ஓர் ஒற்றைத்தன்மையான இடமாக இல்லை, தன் வளர்ச்சியின் இயல்பிலேயே இது பன்முகத்தன்மை கொண்டதொரு தளம். சென்னையின் பெருமிதங்களில் முதன்மையானது எதுவென்று கேட்டால் இதையே சொல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ மதத்திற்கோ சமூகத்திற்கோ மட்டும் சொந்தமானதல்ல இந்நகரம். மக்கள்தொகை அமைப்பில் சில பிரிவினர் மிகுதியாக, சில பிரிவினர் குறைவாக இருக்கலாம். ஆனால் எல்லாப் பிரிவினரின் பங்களிப்பும் சென்னையின் கட்டுமானத்தில் இருந்து வந்திருக்கிறது.

பூர்வகுடிகள் மட்டுமல்லாமல் அரசியல் நிகழ்ச்சிப்போக்கிலும், தொழில் வளர்ச்சிப்போக்கிலும் பிற பகுதிகளிலிருந்து இங்கே வந்து குடியேறிய மக்களின் கரங்களும் அந்தக் கட்டுமானத்தில் இருக்கின்றன. சென்னையின் பூர்வகுடிகள் என்று யாரைச் சொல்லலாம்? பொதுவாகச் சென்னை என்றால் தென்சென்னையின் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு உள்ளிட்ட பகுதிகள்தான் அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அரசியல், தொழில், ஊடகம் போன்றவற்றில் அப்பகுதிளைச் சேர்ந்தோர் பெருமளவுக்கு இருந்தது இதற்கொரு காரணமாக இருக்கலாம். ஆனால், தென்சென்னையிலேயே மீனவர்கள் வாழும் பகுதிகள் இருக்கின்றன, மிக நெடுங்காலமாக அப்பகுதிகளில் வாழ்கிறவர்கள் அவர்கள். விவசாயம் சார்ந்த பகுதிகளும் தென்சென்னையில் இருந்திருக்கின்றன, இப்போதும் கொஞ்சம் இருக்கின்றன.

வடசென்னையில் தலைமுறை தலைமுறையான மீனவக்குடிகள், சமூக அடுக்கின் அடிநிலைக்குத் தள்ளப்பட்ட பாட்டாளிக்குடிகள் இருக்கிறார்கள். பிற்காலத்தில் பிற பகுதிகளிலிருந்து வந்து குடியேறிய சமூகங்களைச் சேர்ந்தோரும் வாழ்கிறார்கள். தொழிற்சாலைகள் உருவானது, வணிகம் வளர்ந்தது, பணம் கொடுக்கல் வாங்கல் தொழில், இவற்றைச் சார்ந்தவையாக மற்ற சிறுதொழில்கள் இணைந்தது ஆகியவற்றின் பின்னணியில் அந்த மக்கள் வந்து கலந்தார்கள்.

**பன்முகப் பண்பாட்டுக் கோட்டை**

இவ்வாறு முற்காலத்திலிருந்து வாழ்ந்து வருவோரும், பிற்காலத்தில் வந்து இணைந்தோருமாகச் சேர்ந்தே சென்னையைப் பன்முகப் பண்பாட்டுக் கோட்டையாகக் கட்டினார்கள்.

மதம் என்று எடுத்துக்கொண்டால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுகிற, இந்து மதம் சார்ந்த மக்கள் இங்கேயும் மிகுதியாக இருக்கிறார்கள். ஆனால் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் இந்து சமய வாழ்வியல் முறைகள் ஒரே விதமாக இல்லை. அதில் தென்மாநிலங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. எந்தக் கடவுளுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதில் கூட அந்த வேறுபாடுகளைக் காணலாம். தென்னகத்திலேயே கூட தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. தமிழகத்தில் முருக வழிபாடு கூடுதல் என்றால் ஆந்திராவில் பாலாஜி, கேரளத்தில் ஐயப்பன். இந்த வேறுபாடுகளால் விளைந்த பன்முகத்தன்மையைச் சென்னையில் பளிச்சென்று காணலாம்.

சமணம், புத்தம், சீக்கியம் என பிற சமயங்களையும் பின்பற்றுகிற மக்கள் இங்கே வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறைகளும் சென்னையின் அடையாளங்களோடு இணைகின்றன. இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய சமயங்கள் வந்து சேர்ந்தன. அவற்றைத் தழுவிய மக்களையும் தழுவிக்கொண்டதே சென்னையின் பன்முகப் பரிமாணம். புகழ்பெற்ற சில கோவில்களைப் போலவே சில பள்ளிவாசல்களும் மசூதிகளும் தேவாலயங்களும் மாதா கோவில்களும் பரவலாக அறியப்பட்டவையாக இருக்கின்றன.

சென்னைக்கு முன்பு மதராஸ் அல்லது மெட்ராஸ் என்ற பெயர்கள் வழங்கியது மூத்த தலைமுறைகளுக்குத் தெரிந்திருக்கும். இப்போதும் கூட தமிழில் ‘சென்னை உயர்நீதிமன்றம்’ என்று கூறினாலும், ஆங்கிலத்தில் ‘மெட்ராஸ் ஹைகோர்ட்’ என்றே குறிப்பிடப்படுகிறது. ‘சென்னை பல்கலைக்கழகம்’ இப்போதும் ஆங்கிலத்தில் ‘யுனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸ்’ என்றே இருக்கிறது. இதற்குச் சட்டக் காரணங்கள், ஆவணச் சிக்கல்கள் இருக்கின்றன. இந்த மதராஸ் அல்லது மெட்ராஸ் என்ற பெயர், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னுரை எழுதிய கிழக்கிந்தியக் கம்பெனியார், 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கு வந்தபோது, தாங்கள் குடியேறுவதற்குத் தேர்ந்தெடுத்த நிலப்பரப்பில் மதராசபட்டினம், சென்னப்பட்டினம் என்ற இரண்டு கிராமங்கள் இருந்தன. அவற்றை இணைத்து மதராஸ் நகரம் உருவாக்கப்பட்டது. மாதரசன்பட்டினம் என்ற கிராமம்தான் மதராசபட்டினம் என்று மருவியது என்றும் கூறப்படுகிறது. 1996ம் ஆண்டில்தான், நீண்டகாலக் கோரிக்கை, அன்றைய திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியால் நிறைவேற்றப்பட்டு இந்நகரம் சென்னை என்று பெயர் மாற்றம் பெற்றது.

கிழக்கிந்திய கம்பெனியார் நிறுவிய மதராஸ் நகரத்தோடு, அவர்களின் வாழ்க்கை முறைகள், பணி முறைகள் உள்ளிட்டவையும் இணைந்தன. ஆங்கிலோ இந்தியர் என்ற சமூகப்பிரிவே உருவானது. சென்னையின் நவீன வளர்ச்சிப் பாதையில் இந்தத் தடங்களும் அழுத்தமாக இருக்கின்றன.

**நாடக மேடையும் சினிமாத் திரையும்**

கலை இலக்கியக் களத்திலும் இப்படிப்பட்ட பன்முக முத்திரைகள் இருக்கின்றன. வள்ளுவர் காலத்திலேயே சென்னையின் இலக்கியப் பங்களிப்பு இருந்திருக்கிறதே. பிற்காலத்தில் இங்கே நாடகக்குழுக்கள், நாடக அரங்குகள் என்று பரவலாகச் செயல்பட்டுள்ளன. இன்றைக்கும் சென்னையில்தான் நாடகக்குழுக்கள் தங்களது ஆர்வத்தை மட்டுமே பிடிப்பாகக் கொண்டு நாடகங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன. அவற்றில் பல குழுக்கள் குறிப்பிட்ட சமூகத்தட்டைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டதும், சபாக்கள் எனப்படும் அரங்குகளால் அந்தக் குழுக்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதும் வேறு கதை. எத்தனை குழுக்கள் ஆழ்ந்த சமூக அக்கறைகளை வெளிப்படுத்தும் நாடகங்களை நிகழ்த்துகின்றன, எத்தனை குழுக்கள் அரங்கங்களைச் சிரிப்பால் மட்டும் நிரப்புகின்றன என்பது வேறு விவாதம். ஆனால் நாடக மேடை என்ற வெளியில் இவர்களுடைய இடத்தை மறுப்பதற்கில்லை.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளிலேயே விரிக்கப்பட்டது சினிமாத் திரை. அதன் ஈர்ப்பில் கனவுகளோடு பல மாவட்டங்களிலிருந்து வந்து நிலையான சென்னைவாசிகளாகிப் போனவர்கள் நிறையப்பேர். சினிமாவின் கலையும் தொழில்நுட்பங்களும் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் ஈடுபட்டுள்ள இவர்களின் பங்களிப்பு, தமிழகத்தில், இந்திய அளவில், ஏன் இப்போது உலக அளவிலும் கூட, ‘கோலிவுட்’ என்ற அடைமொழியைச் சென்னைக்கு ஏற்படுத்தியிருக்கின்றன. நகரத் துடிப்பில் இவர்களின் பங்களிப்புக்கு இதோவொரு சாட்சியம்:

நாங்கள் குடியிருக்கும் பகுதியில் பல இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், கதை-திரைக்கதை-உரையாடல் எழுதுவோர், ஒளிப்பதிவு-ஒலிப்பதிவு-இசையமைப்பு-படத்தொகுப்பு உள்ளிட்ட பலவகைத் துறைகளின் உதவியாளர்கள் வீடுகள் எடுத்து, வாடகைப் பகிர்ந்துகொண்டு வசிக்கிறார்கள். கொரோனா ஊரடங்குக் காலத்தில் அவர்களில் பெரும்பாலோர் சொந்த ஊருக்குப் புலம்பெயர்ந்தார்கள். சுற்றியிருந்த தேநீர்க்கடைகள், சிறு உணவகங்கள் மூடப்பட்டு அவற்றின் உரிமையாளர்களும் தொழிலாளர்களும் புலம்பெயர்ந்தார்கள். காரணம் – அவர்களது வருவாய்க்குக் காரணமான தலையாய வாடிக்கையாளர்கள் அந்த இளம் திரைத்துறையினர்தான். இப்போது அந்த வீடுகளில் நடமாட்டம் மீண்டுவருகிறது, அந்தக் கடைகளும் ஒவ்வொன்றாகத் திறக்கப்படுகின்றன.

ஒருவரையொருவர் சார்ந்திருக்கிற சமூக வாழ்க்கைக்கும், நகர வளர்ச்சிக்கும், பண்பாட்டுத் தளத்திற்கும் கச்சிதமானதோர் எடுத்துக்காட்டல்லவா இது? கல்வி, விளையாட்டு போன்ற அனைத்திலும் இதனைக் காண முடிகிறது.

**ஓவியமும் வண்ணங்களும்**

நாட்டுக்கே நல்லதொரு முன்னுதாரணமாக இந்தப் பன்முகப் பண்பாட்டுத் தளத்தைத் திடப்படுத்திக் கட்டியதில் அரசியல் இயக்கங்களும் மையமான பங்களித்துள்ளன. “இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டிருக்குதோ”” என்று சிவவாக்கிய சித்தரால் கேட்க முடிந்த, “பிறப்பொக்கும்” என்று வள்ளுவரால் அறிவிக்க முடிந்த தமிழ்ச்சமூகத்தின் பெருமதிப்புக்குரிய நல்லிணக்கப் பாரம்பரியத்தின் பலத்தில்தான் அந்த இயக்கங்கள் காலூன்றின. அந்த மகத்தான பாரம்பரியத்திற்குச் சான்றுகளாக, வடசென்னையின் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மரிய மதலினா ஆலயம், பழநி கோயிலிலிருந்து கொண்டுவரப்படும் விபூதியைப் பிரசாதமாகவும் அலங்கரிக்க துளசியையும் பயன்படுத்தும் குனங்குடி மஸ்தான் தலம், நெருப்புக் கோயில் என மக்களின் ஒற்றுமையே வழிபாடாக இருந்து வருவதைத் தெரிவிக்கிறார் வரலாற்று ஆய்வாளர் நிவேதிதோ லூயிஸ்.

பாகுபடுத்திய வர்ணச் சித்தாந்தத்தையும் மநுவாதத்தையும் எதிர்த்து ஒலித்தவையே சிவவாக்கிய, வள்ளுவக் குரல்கள். அவற்றின் தொடர் முழக்கங்களாக இங்கே ஆதிதிராவிடர் இயக்கம், பிராமணர் அல்லாதார் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், பிராமணர் – பிராமணர் அல்லாதார் அனைவரையும் அரவணைத்த தேசிய இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் உள்ளிட்ட அரசியல்/சமூக இயக்கங்களின் பரப்புரைகளும் செயல்பாடுகளும் அமைந்தன. அவரவர் நம்பிக்கைகளும் சடங்குமுறைகளும் மாறுபட்டாலும் மக்கள் இந்த இயக்கங்களில் ஒன்றுபட்டுச் செயல்படுகிறவர்களாக, இந்த இயக்கங்களின் ஆதரவாளர்களாக இருந்துவந்திருக்கிறார்கள்.

சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே இந்த ரேகைகள்தான் படர்ந்திருக்கின்றன. ராமேஸ்வரம் கோவிலைக் கட்டுவதற்கு இராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் வேண்டுகோளை ஏற்று தனவந்தர் சீதக்காதி உதவினார், அந்தக் கட்டுமானத்தில் மிஞ்சிய பொருள்களைக் கொண்டு கீழக்கரை மசூதியைக் கட்டுமாறு சேதுபதி கேட்டுக்கொள்ள அதை சீதக்காதி நிறைவேற்றினார். பரவலாகப் பேசப்படாத, ஆனால் மக்களின் நல்லிணக்கத்தைப் பரவலாக வளர்த்துள்ள இந்த வரலாற்றைத் தனது ‘மறைக்கப்பட்ட வரலாறுகள்’ என்ற உரையில் வெளிப்படுத்தினார் ஆசிரியர் இரா.எட்வின். திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையத்தில் கிறிஸ்துவ மக்களின் மேரியம்மன் கோவில் விழாவில் தேர் வடம் பயனற்றுப் போக, இந்து மக்களின் மாரியம்மன் கோவில் தேர் வடத்தை பக்தர்களே மனமுவந்து எடுத்துக்கொடுத்த செய்தியையும் அவர் பதிவு செய்தார். இத்தகைய வரலாறுகள் விரிவாக சேகரிக்கப்பட்டு தனித் தொகுப்பாகவே கொண்டுவரப்பட வேண்டும். வரலாற்று ஆய்வாளர்கள் இந்தச் சிறப்பான பணியினைச் செய்ய முடியும், செய்ய வேண்டும்.

மத நம்பிக்கைகளின் பெயரால் எளிதாக மக்கள் கூறுபோடப்படுகிற மாநிலங்களின் அரசியல் போக்குகளோடு ஒப்பிட்டால் தமிழகத்தின், சென்னையின் இந்தத் தனித்துவம் எவ்வளவு மாண்புமிக்கது என்பது புரியும். ஒரு வண்ணத்தாளில், அதே வண்ணத்தைக் கொண்டு ஓவியம் தீட்டினால் எவ்வளவு கலைநயம் பொதிந்திருந்தாலும் பார்த்து லயிக்க முடியாது. வேறு வேறு வண்ணங்கள் தீட்டப்படுகிறபோதுதான் அது அழகான, அர்த்தமுள்ள ஓவியமாக உருவெடுக்கும். மக்கள் சமுதாயமும் அப்படித்தான். இன்று, தமிழகம்-சென்னை என்ற ஓவியத்தின் பலவண்ண அழகை ஒற்றை வண்ணத்திற்குள் புகுத்துகிற குதர்க்க அரசியல் நுழைய எத்தனிக்கிறது. அதை வெற்றிகொள்வது, முந்தைய இயக்கங்கள் ஆக்கிக் கொடுத்த பன்முகப் பண்பாட்டுக் காட்டை அடுத்த தலைமுறைகளுக்குச் சேதாரமில்லாமல் ஒப்படைக்கிற பொறுப்போடும் இணைகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share