நடிகர் ரஜினிகாந்துடன் இணைவது தொடர்பாக கமல்ஹாசன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
கமல்ஹாசன் 60ஆவது ஆண்டு திரைபயணத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், ரஜினி-கமல் இருவரும் அரசியலில் இணைய வேண்டும் என்று பேசினார். இதனையடுத்து, ரஜினி-கமல் அரசியலில் இணைகிறார்களா என்ற விவாதம் சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் நடைபெற்றுவருகிறது. இதுதொடர்பாக நேற்று தனித்தனியாக பேட்டியளித்த ரஜினி, கமல் என இருவரும், மக்கள் நலனுக்காக தேவைப்பட்டால் இருவரும் இணைந்து பயணிப்போம் என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியும், நடிகையுமான ஸ்ரீபிரியா, “ஒருமித்த கருத்து உடையவர்களுடன் ஒன்றுசேருவோம் என எங்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ரஜினி-கமல் இருவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது இருவரும் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். ரஜினி – கமல் இணைந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காகத்தான் நான் பணியாற்றுவேன்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் சென்னையிலுள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 20) செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசனிடம், ரஜினியுடன் இணைவது தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “தேவைப்பட்டால் இணைவோம் என்றுதான் இருவரும் சொல்லியிருக்கிறோம் என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் இணைவோம் என்பதும் தமிழர்களின் நலனுக்காகத்தான். அது எந்த தேதி என்றெல்லாம் தற்போது சொல்ல முடியாது. எங்கள் நட்பை விட முக்கியமான செய்தி தமிழக நலன் என்பதுதான்” என்று கமல் தெரிவித்தார்.
இணைவோம் என்று சொல்வது இரண்டு கட்சிகளாக இணைந்து செயல்படுவதா அல்லது மக்கள் நீதி மய்யத்தில் ரஜினி இணைவாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “இந்தக் கேள்வியில் நியாயமே இல்லை. நீங்கள் உங்கள் செய்தியை மட்டும் பார்க்கிறீர்கள். அதுவும் நல்ல செய்தியை விட்டுவிட்டு பரபரப்பு செய்தியை மட்டும் எதிர்பார்க்கிறீர்கள். நல்ல செய்தி என்னவென்றால் தமிழகத்திற்காக உழைப்போம் என்பதுதான். மற்ற செய்திகளை உங்களிடம் தெரியப்படுத்தாமல் செயல்படுத்த மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
�,