ககன் நேவிகேஷன் மூலம் தரையிறங்கி இண்டிகோ விமானம் சாதனை!

Published On:

| By admin

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ககன் நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி, தரையிறங்கிய ஆசியாவின் முதல் விமானம் எனும் பெருமையை இண்டிகோ விமானம் பெற்றுள்ளது. இந்தியாவில் மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட ககன் வழிகாட்டி அமைப்பைப் பயன்படுத்தி, இண்டிகோ நிறுவனத்தின் ஏடிஆர் 72-600 ரக விமானம், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள கிஷான்கார்க் விமான நிலையத்தில் நேற்று காலை வெற்றிகரமாக தரையிறங்கியது.

ஜி.பி.எஸ் உதவியுடன் புவி பெருக்கப்பட்ட வழிசெலுத்தல் முறை ககன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ககன் நேவிகேஷனை இந்திய விமான ஆணையம் மற்றும் இஸ்ரோ இணைந்து தயாரித்துள்ளது. விமானம் தரையிறங்கும்போது, ஓடுபாதையில் இறங்குவதற்கு தேவையான வழிகாட்டல்களை ககன் நேவிகேஷன் வழங்கும், குறிப்பாக சிறிய விமான நிலையங்களுக்கு இது பொருந்தும். ககன் நேவிகேஷன் செயற்கைகோள் அடிப்படையிலான முறையில் இயங்குகிறது


2021ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதிக்கு பின் இந்தியாவில் பதிவு செய்யப்படும் விமானங்களில் ககன் நேவிகேஷன் பொருத்துவது கட்டாயம் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவி்த்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோ ஜாய் தத்தா கூறுகையில்,“இந்திய விமானப் போக்குவரத்து துறையில் இன்று ஒரு மைல்கல். ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ககன் ஜிபிஎஸ் நேவிகேஷனைப் பயன்படுத்தி இண்டிகோ விமானம் தரையிறங்கியது.” என்று தெரிவித்தார்.

மேலும், “உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நேவிகேஷனைப் பயன்படுத்தி விமானத்தை தரையிறக்கிய 3ஆவது நாடு இந்தியா. இதற்கு முன் அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் மட்டுமே இதைச் செய்துள்ளன. சிவில் விமானப் போக்குவரத்தில் ககன் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். விமானங்களை நவீனப்படுத்துதல், விமான தாமதத்தை தவிர்த்தல், எரிபொருள் சிக்கனம், பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு ககன் நேவிகேஷன் உதவியாக இருக்கும். இந்த வரலாற்று முக்கியத்துவத்தில் இண்டிகோ நிறுவனமும் இணைந்துள்ளது” என்று கூறினார்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share