இந்தியாவின் முதல் பெண் தோல் மருத்துவர் : சந்திரா ராஜரத்தினம்

Published On:

| By Balaji

முதல் பெண்கள்- 2

நிவேதிதா லூயிஸ்

அந்தப் புகைப்படத்தில் மெலிதான சோகம் இழையோட, அமர்த்தலாக புன்னகைத்துக் கொண்டிருந்த பெண்ணை கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். காதில் வளையம், மெலிதாக நெற்றி வருடும் சுருள் முடி, கம்பீரமான தோற்றம் என அந்தப் படத்தில் தனியாகத் தெரிந்தார். சென்னையின் தலைசிறந்த தோல் மருத்துவர் டாக்டர் ஏ.எஸ்.தம்பையா நடுவில் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி அவர் செதுக்கிய அந்தக் கால இளம் மருத்துவர்கள் அமர்ந்திருக்கும் குழு புகைப்படம் அது. தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் தோல் நோய் மருத்துவர் பிரேமலதா சுப்பிரமணியம் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து “இந்தியாவின் முதல் பெண் தோல் நோய் மருத்துவர் இந்தப் படத்தில் உள்ள டாக்டர் சந்திரா ராஜரத்தினம்” என்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

**நாட்டின் முதல் டெர்மடாலஜிஸ்ட்**

“அவர் தான் நாட்டின் முதல் பெண் தோல் மருத்துவர் என்பது எனக்கே 90களில்தான் தெரிந்தது. அதுவரை பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்தான் முதல் சரும நோய் மருத்துவர் என்று நினைத்திருந்தேன். 1993ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவமனை தோல் நோயாளிகள் பிரிவின் புது கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொள்ள டாக்டர் சந்திராவை அழைத்திருந்தோம்.

அப்போது தான் அவர் புன்னகைத்தபடி ‘நான்தான் நாட்டின் முதல் டெர்மடாலஜிஸ்ட்’ என்று சொல்லிச் சிரித்தார். என்ன இது, இந்தத் தகவல் தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டோமே என்று வருந்தினேன். பார்க்க பெரிய ஸ்டார் போல இருப்பார், தெரியுமா?”

என்றார்.

*1993ம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவமனை தோல் நோய் கட்டிடம் திறப்புவிழா மேடையில் டாக்டர் சந்திரா (நீல நிற சேலை)*

**தனித்து தெரிந்த சந்திரா ராஜரத்தினம்**

அதை ஆமோதிக்கிறார், அவரது ஜூனியரான தோல் மருத்துவர் பேட்ரிக் ஏசுவடியான். சென்னையின் விரல் விட்டு எண்ணக் கூடிய மிகப் பிரபல தோல் மருத்துவர்களில் பேட்ரிக்கும் ஒருவர்.

“காலேஜில் படிக்கும்போதே அவர் தனியே தெரிவார். அவ்வளவு உயரம், கம்பீரம். அவரது ஆடை அலங்கார நேர்த்தியை மிகவும் வியந்து பார்த்திருக்கிறோம். மேட்சிங் செருப்பு, வளையல், நெக்லஸ் என்று அவருக்கு பயங்கர ஃபேஷன் சென்ஸ் உண்டு. வாட்ச் டயல் கூட சேலைக்கு மேட்சாக அணிந்திருப்பார் என்றால் பாருங்கள். ஆனால் அவர் ஒரு இன்ட்ரோவேர்ட். யாரிடமும் எளிதில் பழகுவது இல்லை. என்னை விட மூன்றாண்டு சீனியர் என்பதால் நானும் அவரிடம் அதிகம் பேசியது இல்லை”

என்று விவரிக்கிறார்.

1954ஆம் ஆண்டு மதராஸ் மருத்துவக் கல்லூரியில் பேட்ரிக் சந்திராவை முதலில் பார்த்திருக்கிறார். அதைக் கொண்டு 1951 முதல் 1955 வரையில் அங்கு இவர் மருத்துவம் படித்திருக்க வேண்டும் என்றும் பேட்ரிக் கூறுகிறார். நாட்டின் முதல் பெண் தோல் நோய் மருத்துவர், ஆனால் இவரைப் பற்றிய தகவல்கள் பொதுவெளியில் இல்லவே இல்லை. “அவர் ஒரு குளோஸ்டு பெர்சன். தனியே வாழ்ந்து வந்தார். அவருண்டு, அவர் வேலையுண்டு என்று இருப்பார்” என்று சந்திரா பற்றி அவரது தங்கை கிரேஸ் ஹில்டா லட்சுமி ராஜரத்தினத்தின் மகன் ஜான் ஐசாக் சொல்கிறார். தற்போது ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசித்து வரும் ஜானி, கட்டுமானப் பணி தொழிலில் ஈடுபட்டுள்ளார், ஸ்டாண்ட் அப் காமெடியன் என்றும் தன்னை அறிமுகம் செய்கிறார். சந்திராவின் குடும்பம் பற்றிய முழு விவரங்களையும் தருகிறார்.

**சந்திராவின் வாழ்க்கை பின்னணி**

திருச்சிராப்பள்ளியைப் பூர்வீகமாகக் கொண்ட கிறிஸ்துவக் குடும்பம் சந்திராவின் குடும்பம். அவரது தந்தை ஜேக்கப் நோவா ராஜரத்தினம் சென்னையில் பத்திரப் பதிவு பதிவாளராகப் பணியாற்றியவர். அயனாவரம், பெரம்பூர் பகுதிகளில் பதிவாளராக இருந்துள்ளார். சந்திராவின் தாய் பெஸ்வின் ராஜரத்தினம், தாய் சேய் நல மருத்துவர். அரசுப் பணியில் இருந்த காரணத்தால், ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் பெஸ்வின் பணியாற்றியுள்ளார். “கடைசியாக பாட்டி கீழ்பாக்கம் மருத்துவமனையின் டீனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்” என்று ஜானி சொல்கிறார்.

**கல்லூரி படிப்பு**

ராஜரத்தினம் – பெஸ்வின் தம்பதியின் இரண்டாவது மகள் சந்திரா. சிறு வயது முதலே அமைதியான பெண்ணாக இருந்துள்ளார் சந்திரா. 1933 அல்லது 1934ஆம் ஆண்டு அவர் பிறந்திருக்கலாம் என்று ஜானி சொல்கிறார். வெளி நபர்களுடன் பேசுவதில் அவருக்கு எப்போதும் விருப்பம் கிடையாது என்றும் குறிப்பிடுகிறார். கீழ்ப்பாக்கம் பராக்கா சாலையிலுள்ள பெரிய வீட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். படிப்பில் படுசுட்டியாக இருந்த சந்திரா, 1951ஆம் ஆண்டு மதராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். 1955ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு முடித்த கையுடன், அரசின் பயோகெமிஸ்ட்ரி துறையில் அவருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது, டாக்டர் நைனன் வர்கீசின் உதவியாளராக அவர் சில காலம் பணியாற்றினார் என்று நினைவுகூர்கிறார் மருத்துவர் பேட்ரிக்.

1961-62ஆம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் (AIIMS) கல்லூரியில் சந்திரா மருத்துவ உயர் படிப்பைத் தொடங்கினார். இந்தியாவில் தோல் துறையில் உயர் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற சிறப்பை மூவாண்டு படிப்பின் இறுதியில் பெற்றார்.

*1970ம் ஆண்டு, அமர்ந்திருப்பவர்கள்: ஸ்ரீதர் ராவ், சந்திரா சேவியர், தம்பையா (நடுவே), பிரேமலதா, பேட்ரிக் யேசுவடியான்*

**காதல்**

இங்கு படித்துக்கொண்டிருந்தபோதுதான் அவருக்கு எலும்புத் துறையில் மேல்படிப்பு படித்துக்கொண்டிருந்த மருத்துவர் தாமஸ் சேவியரின் அறிமுகம் கிடைத்தது. “புதிய இடம், புது சூழல், மொழி தெரியாத ஊர் என்று தனியே தவித்த போது அவருக்கு சேவியரின் அறிமுகம் கிடைத்திருக்க வேண்டும். அதுவே காதலாகவும் மாறியது” என்று பேட்ரிக் சொல்கிறார். “பெரியம்மாவுக்கு ஒரு முறை அம்மை நோய் கண்டிருந்தது.

அப்போது ஆய்வேடு ஒன்றை சமர்ப்பிக்க வேண்டிய கடினமான சூழலும் ஏற்பட்டது. அந்த இக்கட்டான நிலையில் சேவியர்தான் அவரை கவனித்துக் கொண்டு ஆய்வேடு முடிக்கவும் உதவினார். அவர் ஒரு பர்ஃபெக்ட் ஜென்டில்மேன்”

என்று சேவியர் பற்றி ஜானி சொல்கிறார்.

1964-65 வாக்கில் படித்து முடித்து, சந்திரா மீண்டும் பணியில் சேர்ந்தார். தோல் மருத்துவம் முடித்த காரணத்தால் பதவி உயர்வில் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கு தோல் பிரிவின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்தார். “எனக்கு அவர் புரொஃபசர்; அவரின் வழிகாட்டுதலில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதிகம் பேசமாட்டார், பயங்கர ஸ்டிரிக்ட் நபர்” என்று சொல்கிறார் 1967 முதல் 1970 வரை அவரது உதவியாளராகப் பணியாற்றிய மருத்துவர் அகஸ்டின். “தம்பையா, ஈப்பன் போன்ற சீனியர் மருத்துவர்களின் பயிற்சியும் சந்திராவுக்கு உண்டு. சிறந்த மருத்துவர்” என்று நினைவுகூர்கிறார். அவரது மனைவியின் நெருங்கிய தோழியாகவும் இறுதிவரை சந்திரா இருந்துள்ளார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே சேவியர் – சந்திரா ஜோடி மணமுடித்துக் கொண்டது. நெல்லை, சேலம் என பல ஊர்களில் சேவியர் பணியாற்றத் தொடங்கினார். ஈஎஸ்ஐயில் சேவியர் மருத்துவப் பணியாற்றியதாக ஜானி சொல்கிறார். 1966-67வாக்கில் திருமணம் நடந்திருக்க வேண்டும் என்று சொல்லும் பேட்ரிக், தம்பதி சில ஆண்டுகள் குழந்தைப் பேறு இல்லாமல் அவதியுற்றார்கள். ஆண் குழந்தை ஒன்று அவர்களுக்குப் பிறந்தது என்று சொல்கிறார்.

“மேடம் அதிகம் யாரிடமும் பேசும் வழக்கம் இல்லாதவர். ஆனால், அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது நான் சென்று பார்த்தேன். அதன் பின் கணவன் மனைவியுடன் பிணக்கு ஏற்பட, அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை”

என்று சொல்கிறார் சேவியரின் நெருங்கிய நண்பரான மருத்துவர் பால் ஐயாக்குட்டி. 1978-79வாக்கில் கணவன் மனைவி விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். “சேவியர் அதன்பின் படிக்க வெளிநாடு சென்றுவிட்டார். அங்கு ஒரு பெண்ணை சந்தித்து திருமணமும் செய்துகொண்டார்” என்று பால் குறிப்பிடுகிறார்.

**மகன் மீதான பாசம்**

ஆனால் சந்திரா வேறு திருமணம் கடைசி வரை செய்துகொள்ளவில்லை. ஒரே மகன் மைக்கேல் நவீன் சேவியர் மேல் உயிரையே வைத்திருந்தார். மகனையும், வயதான தாயையும் கவனித்துக்கொள்ள ஆள் இல்லை என்று சொல்லி, தஞ்சையிலிருந்து சென்னைக்கு மாறுதல் கேட்டார். இந்த நிலையில் அவருக்குப் பின் தோல் மருத்துவம் படித்த டாக்டர் ரூத் அண்ணாமலை, அரசு மருத்துவமனையின் தோல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். ரூத் பொது மருத்துவத்தில் மேல்படிப்பு முடித்து, மீண்டும் ஓராண்டு தோல் மருத்துவம் படித்தார் என்று டாக்டர் பேட்ரிக் தெளிவுபடுத்துகிறார். தோல் பிரிவில் காலிப்பணியிடம் இல்லாததால், தொழுநோய் பிரிவில் பணியாற்ற முடியுமா என்ற கேள்வி எழ, எந்த தயக்கமும் இன்றி சந்திரா ஒப்புக்கொண்டார்.

“1970களில் இது எவ்வளவு பெரிய விஷயம் பாருங்கள். வெந்நீரும் டெட்டாலும் தவிர வேறு எந்த பாதுகாப்பும் இல்லாமல் மருத்துவர்கள் பணியாற்றிய காலத்தில் பொது மருத்துவமனையின் தொழு நோய் பிரிவுக்குத் தலைமையேற்க பெரும் துணிச்சல் வேண்டும்” என்று சொல்கிறார் மருத்துவர் ராலின். தன் சிறு வயதில் சந்திராவை அருகிருந்து பார்த்து வளர்ந்தவர் ராலின். தன் மகன் நவீனுக்குத் துணையாக அருகே வசிக்கும் ஜீன் மற்றும் ராலின் சகோதரர்களை அழைத்துக்கொண்டு சந்திரா சினிமாவுக்குச் செல்வதுண்டு என்றும் சொல்கிறார். ஃபியட் கார் மேல் சந்திராவுக்கு தீராக்காதல் உண்டு என்று நான் பேசிய அனைவருமே சொல்லிவிட்டார்கள். மகனை அருகே அமர வைத்துக்கொண்டு காரில் நகரை வலம்வருவதை விரும்பியிருக்கிறார். அகஸ்டின் மனைவி மற்றும் மகன்களுடன் தேவி பாரடைஸ் போன்ற மவுன்ட் ரோடு திரையரங்குகளைச் சுற்றி வந்திருக்கிறார்.

மகன் தான் தன் வாழ்க்கையின் ஊன்றுகோல் என்று சந்திரா நினைத்திருக்க வேண்டும். **1970களில் அவரது பராக்கா சாலை இல்லத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 அன்று நவீனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் களைகட்டும்** என்று ராலின் சொல்கிறார். பிரபல எலும்பு மருத்துவர் சவுந்தர பாண்டியன், டி.கே.சண்முகசுந்தரம், ஏ.எம்.செல்வராஜ் போன்றவர்கள் இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தவறாது கலந்துகொள்வதுண்டாம். வண்ண விளக்குகள், அலங்காரங்கள், கேக், டீ பார்ட்டி என்று மாலை 4 மணி முதலே வீடு களைகட்டிவிடும் என்று ராலின் சொல்கிறார். “அப்போலோ மருத்துவமனையில் விசிட்டிங் டாக்டராக சந்திரா பணியாற்றிய போது, மகனை தன்னுடன் அழைத்துச் சென்று ரிசப்ஷனில் உட்கார வைத்துவிடுவார். அவ்வப்போது வந்து அவனை பார்த்துக்கொள்வதுண்டு” என்றும் பேட்ரிக் சொல்கிறார்.

“1970ஆம் ஆண்டு டாக்டர் எம்.நடராஜன் ஏற்பாடு செய்த முதலாம் ஆசிய டெர்மடாலஜி காங்கிரஸில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அப்போது தம்பையா அதன் தலைவராக இருந்தார். விழா நிகழ்ச்சிகளுக்கான பணிகளை ஓடியாடி சந்திரா செய்தார். பல வெளிநாட்டு மருத்துவர்கள் வந்திருந்த நிகழ்வு அது” என்று பேட்ரிக் சொல்கிறார். இதையே டாக்டர் பிரேமலதாவும் நினைவுகூர்கிறார். அந்த மாநாட்டின் வரவேற்புரையை சந்திரா வழங்கினார் என்று குறிப்பிடுகிறார்.

*1970 முதல் ஆசிய டெர்மடாலஜி காங்கிரஸின் வரவேற்புரை வழங்கும் சந்திரா ராஜரத்தினம்*

இப்படி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த சந்திராவுக்கு அடுத்து நேர்ந்த பெரிய அடி, அவரது மகன் அவரைவிட்டுப் பிரிந்தது தான் என்று அவரது உறவினர் ஜானி குறிப்பிடுகிறார். “18 வயதானதும் தன் அம்மா தன்னை அதிகம் கன்ட்ரோல் செய்வதாக நினைத்த நவீன் தன் தந்தையிடம் சென்றுவிட்டான். அதன் பின் பெரியம்மா இன்னும் கடினப்பட்டுப் போனார்”

என்று சொல்கிறார் ஜானி. “பேட்மின்டன், டெனிகாய்ட் விளையாட்டில் அதிகம் ஈடுபட்டார். சொந்தங்களுடமிருந்து விலகிக்கொண்டார். தோட்டக் கலையில் பெரும் ஆர்வம் அவருக்கு உண்டு என்பதால், வீட்டைச் சுற்றி அழகிய தோட்டம் அமைத்திருந்தார். அவரைப் போல லேண்ட்ஸ்கேபிங் செய்பவர்கள் இன்று கூடக் கிடையாது. போகன்வில்லாக்களும், ரோஜாக்களும் அவரது தோட்டத்தில் பூத்துக்குலுங்கும்” என்று சொல்கிறார்.

மதராஸ் அரசு பொது மருத்துவமனையின் தலைமைப் பதவியில் இருந்தே ஓய்வும் பெற்றார் சந்திரா. “நோயாளிகளைத் தொடுவதில் அவருக்கு கொஞ்சம் சங்கடம் உண்டு” என்று சொல்லும் மருத்துவர் பேட்ரிக், ஆனால் அதன் காரணமாக வேலையில் எந்தவித சுணக்கமும் இருக்காது என்று குறிப்பிடுகிறார். மருத்துவர் ஏ.எம்.செல்வராஜிடம் தன்னை வேலைக்கு சேர்த்துக்கொள்ளச் சொல்லி பரிந்துரை செய்தவர் சந்திரா தான் என்று சொல்லும் ராலின், எந்த முன் அனுபவமும் இல்லாத என்னை உதவி மருத்துவராகக் கொண்டு ஏ.எம்.எஸ் போன்ற மூத்த மருத்துவர் பணியாற்றியது சந்திராவிடம் அவர் கொண்டிருந்த நட்பின் காரணமாகத்தான் என்றும் தெரிவிக்கிறார்.

“என்ன தான் பெரியம்மா ஒதுங்கியே இருந்தவர் என்றாலும், இரண்டு முறை என் உயிரைக் காப்பாற்றியவர். அவர் ஓர் அற்புதமான மருத்துவர் என்பதற்கு நானே சாட்சி” என்று ஜானி சொல்கிறார். “எனக்கு ஏழு வயதிருக்கும் போது ஒரு முறை கொதிக்கும் தண்ணீர் என் உடல் முழுக்கப் பட்டுவிட்டது. அவரது உடனடி மருத்துவத்தால் சிறு வடு கூட இல்லாமல் தப்பிவிட்டேன். 13 வயதில் ஒருமுறை மீன் தொட்டியைச் சுத்தம் செய்யும் பிளீச் டப்பாவை மூக்கின் அருகே வைத்துத் திறந்து, மூச்சுத்திணறிவிட்டேன். அப்போதும் என்னை சமயோசிதமாகக் காப்பாற்றியவர் பெரியம்மாதான். வீட்டில் அம்மா ஒரு கிளி வளர்த்துவந்தார். திடீரென ஒரு நாள் அதன் உணவுக்குழாயில் உணவு சிக்கிக்கொண்டு அது போராடத் தொடங்கியது. அப்போது அதற்கு சிறு அறுவை சிகிச்சை செய்து அதன் உயிரைக் காப்பாற்றியதும் பெரியம்மா தான்” என்கிறார்.

**1970லேயே 75 ரூபாய் கட்டணம்**

“சென்னை நகரின் பெரும் பணக்காரர்கள் அவரிடம் தனி கன்சல்டேஷனுக்கு வீட்டுக்கு வருவதுண்டு. 1970களிலேயே ஒரு நோயாளிக்கு 75 ரூபாய் வசூல் செய்தவர் அவர்” என்று ராலின் சொல்கிறார். அவரது அமைதியான, யாருடனும் அதிகம் பழகாத குணம் காரணமாகப் பெரும் பணக்காரர்கள் தங்கள் சரும நோய்களைத் தீர்க்க அவரை அணுகியிருக்கலாம்.

பராக்கா சாலை இல்லத்தில் தனியே வசித்து வந்த சந்திரா 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இறந்துபோனார். “கடும் மழை பெய்துகொண்டிருந்த நேரம் அது. அப்போது வழக்கமாக வீட்டுக்குப் பொருள்கள் கொண்டு வரும் லண்டன் ஃபேன்சி ஸ்டோர் கடையின் உரிமையாளரது இளைய மகன் தற்செயலாக இவரைத் தேடி வந்திருக்கிறார்.

கேட் பூட்டப்பட்டிருந்தது. ஆனால், உள்ளிருந்து துர் நாற்றம் வீசியதை உணர்ந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்ததில் அவர் இறந்து கிடந்தது தெரிந்தது. எப்போது இறந்தார் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை” என்று ஜானி சொல்கிறார்.

“சட்டென எல்லோரிடமும் பழகிவிடுபவர் அல்லர் அவர். அவரை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று அப்பாவிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆனால் கைகூடவில்லை. அவருக்கு இதயத்தில் மைட்ரல் வால்வ் புரொலாப்ஸ் உண்டு. சில நேரங்களில் அதன் காரணமாக அரித்மியாவும் உண்டு. அதற்கு ஏ.எம்.செல்வராஜிடம் சிகிச்சையும் பெற்றுவந்தார் என்பது தெரியும். என் அம்மாவிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். இருந்தபோதும் அவரைப் பற்றிய தகவல்கள் திரட்டவோ, படங்கள் சேகரிக்கவோ தவறிவிட்டேன் என்பது இன்றுவரை எனக்கு பெரும் வருத்தம் தான்” என்று சொல்லி முடிக்கிறார் ராலின்.

**ஆண்களே ஒதுங்கும் துறையில் கம்பீரமாக நின்றவர்**

இந்தியாவின் முதல் பெண் தோல் நோய் நிபுணர். ஆண்களே அயர்ந்து ஒதுங்கும் துறையில் துணிச்சலாக நுழைந்து பணியாற்றியவர். 2005ஆம் ஆண்டு வரை நம்மிடையே வாழ்ந்திருக்கிறார். ஆனால் அவரைப் பற்றிய எந்தத் தரவுகளும் பொதுவெளியில் இல்லை என்பது உண்மையில் வருந்தவேண்டிய விஷயம். வரலாற்றைப் பாதுகாக்கிறோம், தொன்மையைக் காக்கிறோம் என்று சொல்பவர்கள்கூட, பெண்களின் சாதனைகளை சட்டை செய்யாமல் கடந்து போவது பெரும் சோகம். சந்திராவின் கட்டுரை கிடைத்த சிறிது தரவுகள் கொண்டே எழுதப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் அவரைப் பற்றி கிடைக்குமாயின் கட்டுரையில் அதை மகிழ்வுடன் சேர்த்துக் கொள்வேன்.

தனியே பெரிய வீட்டில் வளர்ந்த மூன்று பெண்கள். அதில் மருத்துவத் துறைக்குள் நுழைந்து, நகரின் மிகச்சிறந்த பெண் தோல் நோய் மருத்துவராகப் பணியாற்றியவர்; வாழ்க்கை எவ்வளவு அடித்தாலும் வாங்கிக்கொண்டு தனியே கம்பீரமாக நின்றவர். கடினப்பட்டவராகவே இருக்கலாம். வாழ்க்கை அவரை அப்படி ஆக்கியும் இருக்கலாம். சந்திரா ராஜரத்தினம் – ஒரு புதிர், ஆனால் நல்ல மருத்துவர்!

*படம் உதவி: டாக்டர் பிரேமலதா சுப்பிரமணியம் (சந்திராவின் புகைப்படங்கள் இன்று பொதுவெளியில் கிடைக்க முக்கிய காரணம் இவரே.)*

*தகவல் உதவி: திரு. ஜான் ஐசாக், பெர்த், டாக்டர் பிரேமலதா சுப்பிரமணியம், டாக்டர் பேட்ரிக் யேசுவடியான், டாக்டர் அகஸ்டின், டாக்டர் பால் ஐயாக்குட்டி, டாக்டர் ராலின்*

**கட்டுரையாளர் குறிப்பு**

**நிவேதிதா லூயிஸ்**

சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத்தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும்போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த “முதல் பெண்கள்” என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொலிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவைத் தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

[தமிழகத்தின் முதல் பெண் நாட்டுப்புறவியல் ஆய்வாளர் : சரசுவதி வேணுகோபால் நேர்காணல்!](https://minnambalam.com/entertainment/2020/12/20/29/saraswathi-venugopal-Female-Folklore-Analyst)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share