தமிழ்நாட்டில் ஒமிக்ரான் நிலவரம்: சுகாதாரச் செயலாளர் விளக்கம்!

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் பதற்றமடைய வேண்டாம். சுகாதாரத் துறைக்கு ஒத்துழைப்பு தந்தால் போதும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா, ஆந்திராவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் இன்று(டிசம்பர் 16) செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,” தமிழ்நாட்டிற்கு இதுவரை 15 நாடுகளில் இருந்து வந்த 14,450 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன், ஸ்பெயின், தான்சன்யா, சிங்கப்பூர், அமெரிக்கா, அரபு நாடுகள், இலங்கை, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி யாருக்கு நெகட்டிவ் வருகிறதோ அவர்கள் வீட்டில் 8 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு 8 நாள் தனிமைபடுத்தலுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை மேற்கொண்டதில் 16 பேருக்கு பாசிட்டிவ் வந்தது. இதில் நைஜீரியாவில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்ததில் 7 பேருக்கு பாசிட்டிவ் வந்தது.

நைஜீரியாவிலிருந்து வந்தவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட தையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது காங்கோ நாட்டிலிருந்து வந்த ஆரணியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் எஸ் ஜீன் தொற்று காணப்பட்டுள்ளது. அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருடைய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அறிகுறி இருந்தால் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு, முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதுபோன்று தடுப்பூசியின் இரண்டு தவணையும் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ஒமிக்ரானிலிருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள். மக்கள் பதற்றமடைய வேண்டிய நேரமில்லை, கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதில் ஒத்துழைப்பு தர வேண்டிய நேரம். இதுதான் மக்களிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை.

ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க 1.11 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன. 40,024 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், 25,075 சாதாரண படுக்கைகளும், 8,679 ஐசியூ படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share