குப்பை கொட்டுவதை எதிர்த்து வீடுகளில் கறுப்புக்கொடி!

Published On:

| By Balaji

திருப்பூரில் வீட்டுக்கு அருகே குப்பை கொட்டுவதை எதிர்த்து வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் அவினாசி ரோடு அம்மாபாளையம் அருகே உள்ள கானக்காடு பகுதியில் தனியார் பாறைக்குழி உள்ளது. இந்த பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சி 1 மற்றும் 2ஆவது மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

அங்கு குப்பை கொட்டுவதால் பாறைக்குழியைச் சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனால் இங்கு குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பாறைக்குழியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அம்மாபாளையம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கறுப்புக்கொடி கட்டப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று (ஜனவரி 24) பல்வேறு வீடுகள், வணிக நிறுவனங்களில் கறுப்புக்கொடிகள் கட்டி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share