குடிக்கும் பாலில் புற்றுநோயை உருவாக்கும் நச்சு கலந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாலில் அதிக நச்சுத்தன்மை இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே நேற்று முன்தினம் மக்களவையில் அதிர்ச்சிகரமான தகவலை அளித்தார். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், நாட்டிலேயே AFLATOXIN எம்-1 என்ற நச்சுத்தன்மை கொண்ட பால் தமிழகத்தில்தான் அதிகம் விற்கப்படுகிறது. தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 88 மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. மாட்டுத் தீவனம் மூலம் இந்த நச்சு பாலில் கலக்கிறது” என்று கூறியுள்ளார்..
AFLATOXIN எம்-1 என்ற நச்சு கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய தன்மை கொண்டது. திமுக எம்.பி. டி.ஆர். பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (நவம்பர் 23) தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும், “குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து. இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து முதல்வர் பழனிசாமி தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்” என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆவின் பாலில் நச்சுத்தன்மை ஏதும் இல்லை, தனியார் பாலில் நச்சுத்தன்மை உள்ளதா என உரிய ஆய்வு செய்யப்படும் என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
முன்னதாக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், இதுகுறித்து ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன் இனி மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,”