தஞ்சையில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. இல்ல திருமண விழா இன்று (பிப்ரவரி 26) நடந்தது. இந்தத் திருமண விழாவுக்காக திருச்சியில் இருந்து தஞ்சை வரை சாலைகளில் அதிமுக கொடிகள் கட்டப்பட்டு, போக்குவரத்திலும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
திருமண விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,.
“தஞ்சாவூர் விவசாய பூமி. விவசாயி என்றாலே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் அவ்வளவு கோபம் வருகிறது என்று தெரியவில்லை. பச்சைத் துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகளா என கேட்டு விவசாயிகளை கொச்சைப்படுத்தி வருகிறார். என்னைப்பார்த்து நீங்கள் எல்லாம் ஒரு விவசாயியா என்று கேட்கிறார். நான் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயியாக இருந்தேன். தற்போது முதல்வராக இருந்தாலும் நான் ஒரு விவசாயிதான்.
நான் ஊருக்கு செல்லும்போதெல்லாம் விவசாய பணியை செய்து வருகிறேன். இதற்கு மேல் மு.க.ஸ்டாலினுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும். கடும் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் உழைக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் உயர ஜெயலலிதாவின் ஆசியோடு ஆட்சி நடத்தி வருகிறோம். என்றென்றும் இந்த ஆட்சி மக்களின் நலனையும், விவசாயிகளின் நலனையுமே முழு மூச்சாக கொண்டிருக்கும்.
எதிர்கட்சிகளின் பொய் பிரசாரங்களை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். எப்போதும் அ.தி.மு.க.வின் ஆட்சி மக்களின் நலன் சார்ந்தே இருக்கும். இதற்காகத்தான் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததோடு இல்லாமல் சட்டசபையில் மசோதா நிறைவேற்றி உள்ளோம். அதிமுக ஆட்சிக்கு விளம்பரமே தேவையில்லை. தினம் தினம் ஸ்டாலினே நம்மை பற்றி பேசி பேசி விளம்பரம் கொடுத்து வருகிறார்” என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
**-வேந்தன்**�,