அமெரிக்காவில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இரண்டாவது விருது நேற்று வழங்கப்பட்டது.
அரசுமுறை பயணமாகத் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கடந்த 8ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரைச் சென்றடைந்தார். 10 நாட்கள் திட்டமிடப்பட்ட இந்தப் பயணத்தில் பன்னீர்செல்வத்துடன் அவரது மனைவி விஜயலட்சுமி, மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத், நிதித் துறைச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரும் சென்றுள்ளனர். விமான நிலையத்தில் அவர்களுக்குத் தமிழ்ச் சங்கத்தினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தங்கத் தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் சிகாகோ நாடாளுமன்ற உறுப்பினர் டேனி டேவிஸைச் சந்தித்து உரையாடிய பன்னீர்செல்வம், சிகாகோ தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பண்ணைக்காடு சுப்ரமணி, வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் ராஜாராமையும் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் American Mutli Ethinic Coalition Inc சார்பில் நேற்று (நவம்பர் 11) நடந்த ‘குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர்ஸ் 2019’ விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அங்கு பன்னீர்செல்வத்துக்கு ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் – ஆசியா விருது’ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
American Multi Ethnic Coalition Inc., சார்பாக நடத்தப்பட்ட Global Community Oscars 2019 விழாவில் “International Rising Star of the year – Asia Award” என்ற விருது மாண்புமிகு தமிழக துணை முதல்வர் @OfficeOfOPS அவர்களுக்கு வழங்கப்பட்டது.#DCMUSAVisit pic.twitter.com/D0VA9Lqr5T
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) November 11, 2019
விழாவில் ஏற்புரையாற்றிய துணை முதல்வர், “தமிழக அரசின் சார்பாகவும், மக்களின் சார்பாகவும் இந்த விருதை ஏற்றுக்கொள்கிறேன். விருது பெற்றதன்மூலம் எனது பொறுப்புணர்வு மேலும் அதிகரித்துள்ளது. இதன்மூலம் மக்கள் பணிகளை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யக் கடமைப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார். விழாவில் சிகாகோ நாடாளுமன்ற உறுப்பினர் டேனி டேவிஸ், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் சுதாகர் தலேலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
�,”