கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள்!

Published On:

| By admin

குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள், தங்களுக்கு பணி வழங்க கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
இதையடுத்து பேசிய தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள், “தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் 40 சிறப்புப் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வந்தன. இதில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் 15 சிறப்பு மையங்களில் 43 ஆசிரியைகளும், 2 ஆசிரியர்களும், 277 மாணவ, மாணவிகளுடன் இயங்கி வந்தன.
இந்த நிலையில் இங்கு படித்து வந்த மாணவர்களை முறையான பள்ளிகளில் சேர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பணியாற்றிய பணியாளர்களின் நிலை குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஆகையால் சத்துணவு துறையில் காலி பணியிடங்களுக்கு பணி அனுபவம், கல்வி தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் அல்லது தமிழ்நாடு அரசே இந்த திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share