பாரத் பெட்ரோலிய ஊழியர்கள் போராட்டத்துக்கு தடை!

Published On:

| By Balaji

பாரத் பெட்ரோலியம் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்த போராட்டத்திற்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 21ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத் பெட்ரோலியத்தில் 53.29 சதவிகித பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் குறிப்பிட்ட நிர்வாகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கூறினார்.”

ஏற்கெனவே நாட்டின் பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாகி வரும் வேளையில், தற்போது பாரத் பெட்ரோலியமும் தனியார் மயமாக்கப்பட்டதால் அதில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து பாரத் பெட்ரோலியத்தின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நவம்பர் 28 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தொழிலாளர் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். வரும் 28ஆம் தேதி காலை 6 மணி முதல் 29ஆம் தேதி காலை 6 மணி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்திருந்தது.

இந்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரியும், போராட்டம் நடைபெறவுள்ள நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவன அலுவலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரியும் அந்நிறுவனத்தின் தென் மண்டல பொது மேலாளர் ஷெனாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், தொழில் தகராறு சட்டத்தின்படி, பொதுப் பயன்பாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட 6 வார காலத்திற்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் இந்தப் போராட்டம் சட்டவிரோதமாக நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை இன்று (நவ.25) விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், பாரத் பெட்ரோலிய ஊழியர்கள் போராட்டத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் பாரத் பெட்ரோலிய நிறுவன அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார்.

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் நிர்வாகிகளும் முன்மொழியப்பட்ட தனியார்மயமாக்கலில் ஏமாற்றம் அடைந்தாலும், ஊழியர்கள் அறிவித்த வேலைநிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் கருப்பு பேட்ஜ்கள் அணிந்து வேலை செய்ய முடிவு செய்துள்ளதோடு, நவம்பர் 27 ஆம் தேதி நிறுவனம் வழங்கும் மதிய உணவு மற்றும் இரவு உணவைத் தவிர்க்கவும் முடிவு செய்துள்ளதாக பாரத் பெட்ரோலிய அதிகாரிகள் சங்கத்தின் அனில் மேதே இன்று காலை எகனாமிக் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share