சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை, வேப்பேரியிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 14) காவல் ஆணையர் வழக்கம்போல் தன்னுடைய பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர் அவசர ஊர்திக்குத் தகவல் கொடுத்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் வர சிறிது தாமதமானதால், அவரது காரிலேயே அவரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதையடுத்து, இதயத்தில் இரண்டு அடைப்பு இருப்பதால் அதை சரிசெய்ய அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சங்கர் ஜிவாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து ஆஞ்சியோ சிகிச்சை மூலம் அடைப்பை நீக்கியுள்ளனர் மருத்துவர்கள்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
தற்போது காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஆஞ்சியோ சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
**-வினிதா**
�,