தீபாவளி இரவன்று பலி கொடுக்கப்படவிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து அரிய வகை ஆந்தைகள் மீட்கப்பட்டன.
அரிய வகை உயிரினங்களைப் புனிதமான நாட்களில் பலியிடுவதால் அதிர்ஷ்டம் கிடைப்பதாகவும், தீய சக்திகளிலிருந்து விடுதலை கிடைப்பதாகவும் காலங்காலமாக குறிப்பிட்ட சிலர் நம்புகின்றனர். அந்த வகையில் புனிதமான தினமாகக் கருதப்படும் தீபாவளியன்று பலி கொடுக்கப்படவிருந்த ஐந்து அரியவகை ஆந்தைளை டெல்லி அருகேயுள்ள காஜியாபாத்தில் போலீசார் மீட்டுள்ளனர். விசாரணையின்போது, இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் எனவும், அதிர்ஷ்டத்திற்காக தீபாவளி இரவன்று அவை பலி கொடுக்கப்படவிருந்தவை என்றும் தெரியவந்துள்ளது.
பக்கெட்டுக்குள் ஒளித்துவைத்திருந்த ஆந்தைகளை, மோட்டார் சைக்கிளில் வைத்து கடத்தல் கும்பல் ஒன்று டெல்லி அருகே காஜியாபாத் அருகிலுள்ள வைஷாலி பகுதியில் கடத்திச் சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுமித் மற்றும் படேல் என்பவர்கள் இந்தச் சோதனையில், தாங்கள் வைத்திருந்த ஆந்தைகளை மறைக்க முயன்றபோது, அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் கடத்திய ஆந்தைகள் லட்சுமி தேவிக்காக தீபாவளியன்று இரவில், மலை உச்சியில் வைத்து பலியிடப்பட இருந்தது எனத் தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், செழிப்பை உருவாக்குவதற்கும் இந்த ஆந்தைகளை பேயோட்டுபவர்கள் கேட்டதன் பேரில், பலியிடக் கொடுப்பதற்காகக் கொண்டு சென்றதாக அவர்கள் விசாரணையின்போது தெரிவித்தனர்.
மூத்த காவல்துறை அதிகாரி மனீஷ் மிஸ்ரா பறிமுதல் செய்யப்பட்ட ஆந்தைகளை வனத் துறையினரிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்தார். மேலும், கடத்தல்காரர்கள் குறிப்பிட்ட ‘பேயோட்டுபவர்களை’க் கண்டுபிடித்து கைது செய்ய முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போலீசார், கடத்தல்காரர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதிர்ஷ்டத்துக்காக ஆந்தைகளைக் கடத்திக் கொண்டு சென்றவர்கள், கடைசியில் சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.�,”