சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவொரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம், இதுவரை ஐஐடிகளில் தற்கொலை செய்துகொண்டவர்களின் புள்ளிவிவரங்கள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதில் கடந்த பத்து ஆண்டுகளில் சென்னை ஐஐடியில்தான் அதிகளவு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட விவரங்களைத் தொகுத்ததில் தெரியவந்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் உள்ள 8 ஐஐடிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 52 தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதில் சென்னை ஐஐடியில் மட்டும் 14 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2019இல் மட்டும் 4 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையைத் தொடர்ந்து, கராக்பூர் – 13, கவுகாத்தி – 8, ரூர்கி – 5, டெல்லி – 4, கான்பூர் -4, ஹைதராபாத் – 2 மும்பை – 2 ஆகிய ஐஐடி நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சாதி, மதம் எனப் பொது பாகுபாடு மட்டுமின்றி எதிர்பார்ப்புகள், தனிமை, அதிக போட்டி, அக்கறையின்மை மற்றும் சக மாணவர்கள் கொடுக்கும் அழுத்தம் ஆகியவையே தற்கொலைக்குக் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் கவுன்சிலிங் வழங்கப்படுவதாகச் சென்னை ஐஐடி நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மனநல மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வாயிலாகவும் கவுன்சிலிங் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பல மனநல ஆலோசகர்கள் அல்லது உளவியலாளர்களை நியமித்து உயர் கல்வி நிறுவனங்களில் நிகழும் இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசு முயன்று வருவதாகத் தெரிவித்தார்.
எனினும் உயர் கல்வி நிறுவனங்களில் தற்கொலை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.�,