கிராமப்புறங்களில் பள்ளி மாணவிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் அவலம் நெடுங்காலமாகவே தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் சார்பில் இது குறித்து பல விழிப்புணர்வுகள் நிகழ்ச்சி நடத்தப் பட்டாலும் இந்த அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற குழந்தை திருமணங்களுக்கு முக்கிய காரணம் வறுமை. தங்கள் குழந்தைகளை விரைவில் திருமணம் செய்து கொடுத்து விட்டால் தங்கள் கடமைகள் முடிந்து விடும் என்று கருதி பெற்றோர்களும் விரைவில் பள்ளி குழந்தைகளுக்கு திருமணம் செய்து விடுகிறார்கள். குறிப்பாக இந்த குழந்தை திருமணங்கள் கொரோனா காலங்களில் அதிகரித்துள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒரே காலகட்டத்தில் 511 மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை ஆய்வு தெரிவித்துள்ளது. கொரோனா முதல் அலையின் தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்ட போது ஏராளமான மாணவ மாணவிகள் பள்ளிக்கு வராமல் இருப்பதை பள்ளிக்கல்வித்துறை கண்டறிந்தது. அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க பள்ளிக்கல்வித்துறை தீர்மானித்தது. அப்பொழுது வேலைகளுக்கு சென்று கொண்டிருந்த ஏராளமான குழந்தைகளை மீட்டு பள்ளியில் மீண்டும் சேர்த்தனர்.
மேலும், 511 மாணவிகளுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளதை கண்டறிந்த பள்ளிக்கல்வித்துறை, அவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, அரசு அதிகாரிகள் உதவிகளோடு அந்த மாணவிகளை மீண்டும் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். இதில் 417 பேர் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள். இதுபோன்ற குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுக்க, அரசு கூடுதல் விழிப்புணர்வுகளை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
.