ஆப்பிள் நிறுவனம் ஹைதராபாத்தில் புதிதாக 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெலங்கானா மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெலங்கானா அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை முதன்மைச் செயலாளர் ஜெயேஷ் ரஞ்சன் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “ஆப்பிள் நிறுவனம் ஹைதராபாத் வளர்ச்சி மையத்திற்குப் புதிதாக 3,500 பேரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது 5,000 வரையிலும் கூட அதிகரிக்கக்கூடும். இதற்கு எந்தவிதமான கால வரம்பும் கிடையாது” என்றார். ஹைதராபாத்தில் நடந்த பாக்டெரா தொழில்நுட்ப அலுவலகத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவிலேயே பாக்டெரா தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல் அலுவலகம் ஹைதராபாத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த அலுவலகத்தில் 150 பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இதை 300 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தெலங்கானாவின் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், புதுமையான உலகை அமைப்பதற்கும் பாக்டெரா டெக்னாலஜீஸ் உதவும் எனவும், அடுத்த 2 அல்லது 3 வருடங்களில் 3,000 பேரைக் கொண்ட நிறுவனமாக பாக்டெரா டெக்னாலஜீஸ் வளரும் என்றும் இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு மே மாதத்தில் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சூப்பர்டினோ தெலங்கானாவில் வளர்ச்சி மையம் ஒன்றை அமைத்தது. இந்த நிறுவனம் ஐபோன், ஐபேடு, ஆப்பிள் வாட்ச் போன்றவற்றில் டிஜிட்டல் வரைபடங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.�,