சென்னை திரும்ப 500 சிறப்பு பேருந்துகள்!

Published On:

| By Balaji

பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை (செப்டம்பர் 1) திறக்கப்பட இருப்பதால், வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் இருந்து கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி (நாளை) முதல் பள்ளி – கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. கொரோனா தொற்று பரவலால் கடந்த 16 மாதமாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதால் வெளியூர் சென்றிருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகிறார்கள்.

மேலும் மூன்று நாட்கள் தொடர் விடுப்பு காரணமாகவும் சென்னையில் இருந்து பலர் வெளியூர் சென்றுள்ளனர். வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருச்சி, சேலம், ஓசூர், தர்மபுரி ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 300 பேருந்துகள் கூடுதலாக விடப்படுகிறது. இதேபோல் தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் 150 சிறப்பு பேருந்துகள் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது. சேலம் போக்குவரத்து கழகத்தின் மூலம் 50 பஸ்களும் இது தவிர கோவை, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் சென்னைக்கு விடப்பட்டுள்ளன.

இதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்தும் கூடுதல் பேருந்துகள் வெளியூர்களுக்கு விடப்பட்டுள்ளது. மற்ற போக்குவரத்து கழக பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்ட போதிலும் அரசு விரைவு பேருந்துகள் வழக்கமான அளவில் விடப்படுகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் 750 விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், 350 ஏசி விரைவு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும், பள்ளி – கல்லூரிகள் திறப்பதால் பஸ் தேவை அதிகரிக்கவில்லை என்றும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share