வரும் மக்களவைத் தேர்தலில் 50 விழுக்காடு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்கில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் எல்லா வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை உறுதி செய்வதற்கான ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் ஒவ்வொரு தொகுதியிலும் ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் ஒப்புகைச்சீட்டுகளை சரிபார்த்துக்கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, 50 விழுக்காடு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
திமுக தலைவர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷரத் பவார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி.வேணுகோபால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், திருணமூல் காங்கிரஸ் தலைவர் டெரக் ஓ பிரயன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட 21 கட்சித் தலைவர்கள் இவ்வழக்கை தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கொகாய், வரும் 25ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார். அன்றைய தினம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 என ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 23ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.�,