தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிரா, மும்பை,கோவா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. தற்போது, தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழையால்,மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று(ஜூன் 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் அதிகமாக 14 சென்டி மீட்டர் மழையும், தேனி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தலா 12 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து,கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணூர், புதுச்சேரி, நாகை, கடலூர், காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கும் வங்கக்கடலுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால்,மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.�,