வேலைவாய்ப்பின்மை, விவசாயத்தின் வீழ்ச்சி, பணம் மட்டுமே பிரதானம் எனும் பார்வை, சினிமாவில் நடிகனாக வலம் வர வேண்டும் என்ற கனவு என நான்கு இளைஞர்களுக்கு நான்குவிதமான காரணங்களால் பெரியளவில் பணம் வேண்டும். அதற்கு ஒரே தீர்வு என நம்பி வங்கியை கொள்ளையடிக்க கிளம்புகின்றனர். அவர்கள் நினைத்தது சாத்தியமானதா என்பதே கொரில்லா.
ஜீவா நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை டான் சாண்டி இயக்கியுள்ளார். சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, ராதாரவி, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஷாலினி பாண்டே முதன்முறையாக ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சின்னச் சின்ன திருட்டு செயல்களில் ஈடுபட்டுவரும் ஜீவா மெடிக்கல் கடையில் திருடும் மருந்துகளைக் கொண்டு தனியாக மருத்துவமனை ஆரம்பித்து வசூல் வேட்டை நடத்துகிறார். ’காங்’ என்ற சிம்பன்ஸி குரங்கை ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றிவந்து தன்னோடு வைத்துள்ளார். குரங்கும் அவரது சகோதரன் போல பாசமாக பழகுகிறது.
டெம்ப்ளேட் தமிழ் சினிமா கதாநாயகி போல் வந்து எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் உள்ளார் ஷாலினி பாண்டே. யோகி பாபு, சுவாமிநாதனின் எண்ட்ரிக்குப் பின் கலகலப்புகூடுகிறது. படத்தின் தொடக்கத்தில் அறிமுகமாகி காணாமல்போகும் ராஜேந்திரன் சரியான இடத்தில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார்.
ஒரே அடியாக மொத்த பிரச்சினையும் தீர வங்கியை கொள்ளையடிக்க கிளம்புகிறது இந்த கூட்டணி. படம் முழுக்க காமெடி ட்ரீட் கொடுத்துள்ள இயக்குநர் விவசாயப் பிரச்சினையையும் அவ்வப்போது தொட்டுக்கொண்டு பின் இறுதிவரை எடுத்துச் செல்கிறார்.
வங்கிக் கொள்ளையில் எப்படி ஈடுபடுவது என்பதை அறிய பல ஹாலிவுட் படங்களைப் பார்க்கின்றனர் ஜீவாவும் அவரது கூட்டாளிகளும். இயக்குநரும் அத்தகைய படங்களைப் பார்த்து அந்த ஐடியாக்களை படத்தில் முயற்சித்துப் பார்த்துள்ளார். ‘டாக் டே ஆஃப்டர்னூன்’ உள்ளிட்ட சில படங்களின் காட்சிகள் கண்முன்னே வந்து செல்கின்றன.
செல்லூர் ராஜூவின் தெர்மாகோல், கமல்ஹாசனின் டிவிட், விவசாயத்தை காப்பாற்றுங்கள் என்ற முழக்கம் என சமூகவலைதளங்களில் டிரெண்டாகும் விஷயங்களை அங்கங்கு தெளித்து காட்சிகளை நிரப்புவதை தமிழ் சினிமா இயக்குநர்கள் எப்போது நிறுத்துவார்கள் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
‘ஈ’ போன்ற படங்களில் பார்த்த ஜீவாவை சற்று மாற்றி இதில் கொண்டுவந்துள்ளனர். சிம்பன்ஸிக்கும் ஜீவாவுக்குமான நெருக்கம் நன்றாக வெளிப்படுகிறது. சதீஷ், விவேக் பிரசன்னாவின் காமெடி கூட்டணி சிரிப்பை வரவழைக்கிறது. குரங்கை அழைத்துவந்து காமெடி செய்தாலும் அந்தரங்க உறுப்பில் அடிபட்டு கத்தினால்தான் காமெடி என ஏற்றுக்கொள்வார்கள் என்ற முடிவுக்கு எப்படி வந்தார் எனத் தெரியவில்லை.
குருதேவின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசை பொருத்தம், ரூபனின் படத்தொகுப்பும் கச்சிதம்.
நல்ல பொழுதுபோக்கான காமெடி படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் டான் சாண்டி. அதை மட்டும் சிறப்பாக செய்திருக்கலாம். தேவைக்கு விவசாயப் பிரச்சினைகளை தொட்டுக்கொள்வதை தவிர்த்திருக்கலாம்.
�,”