தன் குழந்தையைச் சீரழித்துக் கொன்று, மனைவியை மன நோயாளியாக்கிய காமக் கொடூரனை தண்டிக்கிற ஒரு தந்தையின் கதைதான் அசுரவதம்.
வழக்கமான பழிவாங்கல் தன்மை கொண்ட தமிழ் சினிமாவிலிருந்து மாறுபட்டு நிற்கிறது அசுரவதம். மதுரை கச்சக்கட்டி கிராமத்தில் மளிகைக் கடை நடத்திவருகிறார் சமயன் (வசுமித்ர). பெண் பித்தனான அவருடன் மனைவி சண்டையிட்டு அப்பா வீட்டுக்குப் போய்விடுகிறார். இந்தச் சமயத்தில் பல மிஸ்டு கால்கள் வருகின்றன. பதற்றமடையும் சமயன் மிஸ்டு கால் கொடுத்தவரிடம் பேசுகிறார். என்ன சமயன் பதற்றமா இருக்கியா, கவலைப்படாத எல்லாம் ஒரு வாரத்துக்குதான். அதுக்குப் பிறகு நீ உயிரோடயே இருக்க மாட்ட” என மிரட்டுகிறது எதிரில் ஒலிக்கும் ஆண் குரல். அந்தக் குரல் சரவணனுடையது (சசிகுமார்).
அந்த மொபைல் அழைப்பிலிருந்தே படம் முழுவதும் சமயனைப் பதற்றத்தில் வைத்திருப்பதோடு, நம்மையும் அந்தப் பதற்றத்தில் பங்கெடுக்க வைத்திருக்கிறார்கள். கடைக்குச் சென்றால் எதிரில் நிற்கிறார், நடந்தால் பின்தொடர்கிறார், ஓடினால் துரத்துகிறார், பாதுகாப்புக்கு ஆட்களை அழைத்து வந்தாலும் துப்பாக்கியோடு எதிர்த்து நிற்பது என வசுமித்ரவை விடாமல் துரத்துகிறார் சசிகுமார். எதற்காக இந்தத் துரத்தல், ஏன் இத்தனை ஆவேசம், என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மருதுபாண்டியன்.
பொருளாதாரத் தேவைக்காக அழகான குடும்பத்தைப் பிரிந்து எங்கேயோ ஓர் அயல் தேசத்தில் அநாதைபோல் வாழ்பவர்களின் நிலையை இந்தப் படம் கோடிட்டுக் காட்டுகிறது. வசனத்தைக் குறைத்துக் காட்சிகளால் கதை சொல்ல முயற்சித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதற்கு எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு பலம் சேர்க்கிறது. ஆனால், ஒரு சில இடங்களில் எங்கிருந்து சோர்ஸ் லைட் வருகிறது என்பதைக் கடந்துதான் நாம் படம் பார்க்க வேண்டியிருக்கிறது.
படத்தில் காலம் சரியானதாகக் குறிப்பிடாமல் இருப்பது நெருடல். ஃப்ளாஷ்பேக் செல்லும் “சில வருடங்களுக்கு முன்பு” என்பது எத்தனை ஆண்டுகள் என்பது தெளிவாகவில்லை. வசுமித்ரக்கு மாறும் தோற்றம் மற்றவர்களுக்கு மாறாமல் இருக்கிறது. முன் கூட்டியே என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்வையாளன் உணர்ந்துவிடுவதாலும், ஒரே விஷயம் திரும்பத் திரும்ப வருவதுபோல் காட்சி அமைத்திருப்பதும் சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் நீளமும் சோர்வை உண்டாக்குகிறது.
பின்னணி இசையில் கோவிந்த் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். சண்டைக் காட்சிகள் மிரட்டல். குழந்தைகளோடும், குடும்பத்தோடும் படம் பார்க்க வருகிறார்கள். அதை மனதில் கொண்டு அதிக வன்முறையைத் தவிர்த்திருக்கலாம். கலை இயக்குநர் குமாரின் கைவண்ணம் காட்சியின் சூழல்களை அசலாகக் கண்முன் நிறுத்துகிறது. குறிப்பாக ஒரு காட்சியில் இடிந்த சுவரின் பின்புலத்தில் வரைந்திருக்கும் சக்தி, சிவன் படத்தில், சிவன் மட்டுமிருக்க, சக்தி உடைந்திருப்பது ஆயிரம் அர்த்தங்களைக் கொடுக்கிறது. இது போன்ற நுட்பமான விவரங்கள் படத்தில் ஏராளம்.
சசிகுமார், வசுமித்ர, நந்திதா, ஷீலா, ராஜசிம்மன், ஸ்ரீஜித் ரவி ஆகியோர் தங்களது நடிப்பில் தனிக் கவனம் பெறுகிறார்கள். தனது முந்தைய படங்களில் வெளிப்படுத்திய வழக்கமான நடிப்பிலிருந்து மாறுபட்டிருக்கிறார் சசிகுமார். குறைந்த காட்சிகளில் வந்திருந்தாலும் நந்திதா, ஷீலா மனதில் பதிகிறார்கள்.
வில்லனை அசுரத்தனமாக வதைக்கின்ற நாயகனைச் சித்திரித்த இயக்குநர், வில்லனின் கொடூரச் செயல்களுக்கான உளவியல் காரணங்களைக் காட்டத் தவறிவிட்டார். இருப்பினும் சமகாலத்தில் நிகழ்கின்ற முக்கியமான பிரச்சினையை வைத்துக் கதை எழுதிய படக் குழுவிற்குப் பாராட்டுகள்.
இயக்குநர், தான் எடுத்துக்கொண்ட கதைக்கு நேர்மையாக இருந்திருக்கிறார். கதையை இன்னும் ஆழமாக, உணர்வுபூர்வமாகக் கையாண்டிருந்தால் படத்தின் தாக்கம் வேறு விதமாக இருந்திருக்கும்.�,”