ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன், விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
பிரிஸ்பேனில் நேற்று (நவம்பர் 21) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் தொடக்க வீரர் ஷிகர் தவன் அதிரடியாக 42 பந்துகளில் 72 ரன்களை சேர்த்தபோதும் அது அணியின் வெற்றிக்கு உதவாமல் போனது. இருப்பினும் அவரது இந்த ஆட்டம் கேப்டன் விராட் கோலியின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளது.
டி20 வரலாற்றில் இந்தியா சார்பில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 641 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். இவர் இந்தச் சாதனையை 2016ஆம் ஆண்டு படைத்திருந்தார். தற்போது ஷிகர் தவன் இந்த சாதனையை முறியடித்துள்ளார். தவன் இந்த ஆண்டில் இதுவரை 648 ரன்கள் சேர்த்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் ஃபகர் ஜமான் 576 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ரோஹித் ஷர்மா 567 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவன், முறையே 4, 29, 35, 38, 6 என சொற்ப ரன்களே எடுத்திருந்தார். பின்னர் நடைபெற்ற டி20 தொடரில் முறையே 3, 43, 92 ரன்கள் எடுத்து மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்பிய அவர், தற்போது ஆஸ்திரேலியாவிலும் தனது சிறப்பான ஃபார்மைத் தொடர்கிறார்.�,