சென்னையில் கடந்த மாதம் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டது. இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி வெகுநாட்களாக அமலில் இருந்து வருகிறது ஆனால் அதை பொதுமக்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை. போக்குவரத்துத்துறை இதுகுறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் சில நாட்கள் இந்த விதியை கடைப்பிடித்து விட்டு கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதனால் கடந்த மாதம் சென்னை போக்குவரத்து துறை இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் வசூலித்தது.
போக்குவரத்துத் துறையின் அறிக்கைக்கு பிறகு இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தாலும் பின்னால் பயணம் செய்பவர்கள் இன்னும் ஹெல்மெட் விதிகளை கடைப்பிடிப்பதில்லை. இந்நிலையில் கடந்த 12 நாட்களில் 21,894 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக சென்னை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த 21,894 வாகன ஓட்டிகள் மீதும், ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த 18,035 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
மேலும், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் இருந்து 21.98 லட்சம் ரூபாயும், ஹெல்மெட் அணியாமல் பின்னால் பயணம் செய்தவர்களிடம் இருந்து 18 லட்சம் ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.