அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் பதித்து வந்தாலும், ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்குக் கொடுக்கப்படுகிறதா என்பது இன்றளவும் கேள்விக்குறியாக உள்ளது. அரசியல், சட்டமன்றம், நிர்வாகம் என அனைத்திலும் பாலின சமத்துவம் இல்லை என்பதே உண்மை.
இந்நிலையில் , சட்டமன்றத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இடம் அளிப்பது குறித்து மத்திய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனிதி என்ற அமைப்பைச் சேர்ந்த முத்துச்செல்வி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலின சமத்துவம் தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில் சட்டமன்றத்தில் ஆண்களுக்கு நிகரான பிரதிநிதித்துவம் பெண்களுக்கு அளிக்கப்படுவதில்லை. சட்டமன்றத்தில் 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பெண் உறுப்பினர்கள் உள்ளனர். எனவே சட்டமன்றத்தில் சம பாலினத்தை நிறுவ மாநில அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். பல்வேறு துறைகளிலும் பாலின சமத்துவம் என்பதே கிடையாது, அதற்கான தீர்வு இன்றளவும் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 8) விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், இது சட்டமியற்றி அமல்படுத்த வேண்டிய விவகாரம் என்பதால் மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து முடிவு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்
**-பிரியா**
�,