இந்தியாவில் உணவுப் பஞ்சம் நீங்கியது எப்படி? ஜெ.ஜெயரஞ்சன்

Published On:

| By Balaji

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து பொருளாதார ஆராய்ச்சியாளரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நாள்தோறும் மின்னம்பலம் யூ ட்யூப் சேனல் வழியாக பகிர்ந்து வருகிறார்.

தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிகள் குறித்து இன்று (மே 20) பேசிய ஜெயரஞ்சன், இந்தியாவில் உணவுப் பஞ்சம் எவ்வாறு போக்கப்பட்டது என்று பேசினார்.

“புலம்பெயர் தொழிலாளர்களும், வட இந்தியாவிலுள்ள அடித்தட்டு மக்களும் போதுமான அளவு உணவு கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். மூன்று வேளை சாப்பிடுபவர்கள் இரண்டு வேளைகளாக குறைத்துக்கொண்டுள்ளனர். நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் வழியில் அளிக்கும் உணவுகளை வாங்கிச் சாப்பிடுகிறார்” என்று சுட்டிக்காட்டிய ஜெயரஞ்சன்,

மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இல்லாமல் 1960 களில் இந்தியாவில் மிகப்பெரிய பஞ்சம் நிலவியதாகவும், பசி என்பது சாதாரணமாக இருந்ததாகவும் அமெரிக்காவிலிருந்து கப்பலில் கோதுமை வந்து இறங்கினால்தான் உணவு என்ற மோசமான நிலை நீடித்ததாகவும் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து, “இந்த நிலையை மாற்றுவதற்கு பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த சி.சுப்பிரமணியன் உணவுத் துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு, பஞ்சம் என்ற நிலையை போக்குவதற்காக பல நாடுகளின் உதவிகளையும் கேட்கிறார். அப்போது, அனைத்து நாடுகளுக்குமான உணவுக் கழகம், உணவு உற்பத்தியை அதிகரிக்க வீரிய ஒட்டுரக கோதுமை மற்றும் அரிசிக்கான விதைகளை கொடுத்தனர். தொடர்ச்சியாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிதீவிர சாகுபடி திட்டம் என்ற ஒன்றை செயல்படுத்துகிறார்கள்” என்றும் கூறுகிறார் ஜெயரஞ்சன்.

இந்திய உணவுக் கழகம் ஏற்படுத்தப்பட்டது, தமிழகத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் ஏற்படுத்தப்பட்டது. இப்படியான தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் இந்திய உணவுக் கழகத்திடம் 600 லட்சம் டன் உணவுப் பொருட்கள் இருப்பில் உள்ளது. ஏற்கனவே இருந்த மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் தற்போது உணவு வகைகள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன என்று குறிப்பிடும் ஜெயரஞ்சன், மற்ற மாநிலங்களில் இவ்வாறு ஏன் கிடைப்பதில்லை என்பதைப் பகிர்ந்துகொள்கிறார்.

முழு காணொலியையும் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share